இந்தியப் பிரதமர் மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும் என லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சைபுல்லா மிரட்டல் விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 'பாடம் கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் ஒருவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்ததற்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு பேசியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' இந்தத் தாக்குதலை நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர்
இதற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மே 7-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத முகாம்களை அழித்தன. இந்த நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத் தளபதி, "பயங்கரவாதத்தை நிறுத்தத் தவறினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது" என்று கடுமையாக எச்சரித்திருந்தார்.
பாகிஸ்தான் பயங்கரவாதி பேச்சு
இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சைபுல்லா இது தொடர்பாகப் பேசியுள்ளார். "ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10-ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல, இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருக்கு கோரிக்கை விடுக்கிறேன்.” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு இந்தியப் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதிக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் சைபுல்லா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதி அந்நாட்டின் ராணுவத் தளபதிக்கு கோரிக்கை விடுத்திருப்பது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கொண்டுள்ள உறவை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது.
