ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பெண்கள் குறித்து பாகிஸ்தான் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 1971ல் 'ஆபரேஷன் சர்ச்லைட்' மூலம் பாகிஸ்தான் ராணுவம் 4 லட்சம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததை இந்தியா சுட்டிக்காட்டியது.
ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பெண்கள் குறித்துப் பேச முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் உரிமை மோசமான நிலையில் இருப்பதாகவும் இந்தியா விமர்சித்துள்ளது.
ஐ.நா.வில் விவாதத்தில் பேசிய இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ், 1971ஆம் ஆண்டு 'ஆபரேஷன் சர்ச்லைட்' நடவடிக்கையின்போது 4 லட்சம் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இனப்படுகொலை செய்த நாடு பாகிஸ்தான் எனக் குற்றம் சாட்டினார்.
பெண்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விவாதத்தில் பேசிய ஹரீஷ், பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் குறித்துத் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகச் சாடினார்.
“பெண்கள் நலன், அமைதி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எங்களின் சாதனை களங்கமற்றது. தன் சொந்த மக்களைக் குண்டு வீசிக் கொன்று, இனப்படுகொலைகளை நடத்தும் ஒரு நாடு (பாகிஸ்தான்), திரித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்களால் உலகை திசைதிருப்ப முயற்சி செய்கிறது” என்றும் ஹரீஷ் கூறினார்.
கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான், சொந்த மக்களையே குண்டு வீசிச் கொல்லும் நாடு பாகிஸ்தான் என இந்தியா குற்றம்சாட்டியது.
'ஆபரேஷன் சர்ச்லைட்' இனப்படுகொலை
ஐ.நா.வில் 1971ஆம் ஆண்டு 'ஆபரேஷன் சர்ச்லைட்' நடவடிக்கையைப் பற்றிப் பேசிய இந்தியப் பிரதிநிதி, “பாகிஸ்தான் ராணுவம் அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) வங்காளிகளுக்கு எதிராக ஒரு கொடூரமான நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, லட்சக்கணக்கான பெண்கள் பிடித்துச் செல்லப்பட்டு, திரும்பத் திரும்ப பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்” என்றார். இந்த நடவடிக்கையை அன்றைய பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் டிக்கா கான் முன்னின்று நடத்தினார்.
இந்தக் கொடூரங்கள் 1971 வங்கதேச விடுதலைப் போரின் போது நடந்தன. பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டு நிபந்தனையின்றி சரணடைந்தது. இதுவே வங்கதேசம் என்ற நாடு உருவாவதற்கு வழிவகுத்தது.
4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த நாடு
இந்த வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துரைத்த ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி ஹரீஷ், பாகிஸ்தானின் பொய்ப் பிரச்சாரத்தை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்த நாடு (பாகிஸ்தான்) 1971 இல் 'ஆபரேஷன் சர்ச்லைட்' நடவடிக்கை மூலம் தனது ராணுவம் சொந்த நாட்டின் 4,00,000 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து இனப்படுகொலை செய்ய அனுமதித்தது” என்று அவர் கூறினார்.
காஷ்மீரில் உள்ள பெண்கள் பல ஆண்டுகளாக போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பாலியல் வன்முறையைச் சகித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம் தனது உரையில் குற்றம் சாட்டியதற்குப் பதிலடியாக இந்தியா இவ்வாறு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
