பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்!!
உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம். எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்
ஜனநாயக காங்கிரஸ் பிரச்சாரக் குழு வரவேற்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். ''நான் நினைப்பது என்னவென்றால் உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம். எந்தவித ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டுள்ளது'' என்றார்.
இந்தக் கூட்டத்தில், சீனா மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து பேசும்போது இவ்வாறு ஜோ பைடன் குறிப்பிட்டார். இந்த நபர்தான் (ஜி ஜின்பிங் பெயரை குறிப்பிடாமல்) தான் விரும்புவதைப் புரிந்துகொள்கிறார், ஆனால் பெரிய, பெரிய சிக்கல்களைக் கொண்டுள்ளார். நாம் அதை எவ்வாறு கையாள்வது? இதை ரஷ்யாவுடன் இணைந்து எவ்வாறு கையாள்வது? மேலும் நான் நினைப்பது உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் இருக்கலாம். எந்த ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்ககளைக் கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டில் மிகப் பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அமெரிக்காவுக்கு உள்ளது'' என்றார்.
அதிபர் ஜோ பைடன் இவ்வாறு பேசி இருப்பது, அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த முயற்சித்து வரும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக 48 பக்க அறிக்கை வெளியான இரண்டு நாட்களில் ஜோ பைடன் இவ்வாறு பேசி இருக்கிறார். இந்த அறிக்கையில் பாகிஸ்தானின் செயல்கள் குறித்து குறிப்பிடப்பட்டு இருந்த காரணத்தினால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தானை விமர்சித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த புதன்கிழமை அமெரிக்கா வெளியிட்டு இருந்த அரசின் முக்கிய கொள்கை அறிக்கையில், அமெரிக்காவுக்கு ரஷ்யா மற்றும் சீனாவினால் பாதுகாப்பு ஆபத்து உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா தங்களுக்குள் எல்லையில்லா கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு இருந்தாலும், அந்த நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் வேறு வேறாக இருக்கிறது என்று அந்த கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.