இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக சீனா, பாகிஸ்தானுடன் இணைந்து பயோ வெப்பன் (உயிரியல் ஆயுதங்களை) தயாரிக்க ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் சீனாவின் வூபே மாகாணம், வுஹான் வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன. இந்த வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அந்நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் இது குறித்து தி கிளாக்சன் செய்தி நிறுவனம் பல உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளது. தற்போது இந்த கட்டுரை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

அதில் அந்தோனி கிளான்  என்பவரின் கூற்றுப்படி, சீனா இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகம், பாகிஸ்தான் இராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு (டெஸ்டோ) உடன் ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ரகசிய உயிரியல் சோதனை  திட்டத்தின் கீழ் ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல்வேறு இரட்டை பயன்பாட்டு ஆராய்ச்சி திட்டங்களில் பாகிஸ்தான் டெஸ்டோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது . சீனாவுக்கு எதிராக அமெரிக்கா,ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகள் ஒருங்கிணைந்து உள்ளன. அதேபோல் சீனா, ரஷ்யா, வடகொரியா, பாகிஸ்தான் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் பாராட்டி வருகின்றன. உலகம் இரண்டு அணிகளாக  பிரிந்துள்ள நிலையில், தற்போது தனது எதிரி நாடுகளுக்கு எதிராக பிரயோக படுத்துவதற்காக சீனா உயிரியல் ஆயுதங்களை தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் மூலமாக ஏற்கனவே சீனா மறைமுக பயோ வெப்பன் போரை தொடங்கிவிட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, பாகிஸ்தானை ஆபத்து நிறைந்த வைரஸ்களை ஆராய்வதற்கான இடமாக சீனா தேர்வு செய்துள்ளதாகவும், அதன்மூலம் தங்கள் நாட்டு மண்ணையும், மக்களையும் ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்பதுடன், உலக அளவில் தனக்கு ஏற்படும் அவப் பெயரிலிருந்து தப்பிக்கவும் இந்த உயிரியல் ஆராய்ச்சிகளை பாகிஸ்தானில் வைத்து நடத்த சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக டி.என்.ஏ ஆராய்ச்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது ஒரு உயிரியல் ஆயுதத்தை நோக்கமாகக் கொண்டோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அதை பயன்படுத்துவதற்கான திட்டமாக இருக்கலாம் என்றும் சர்வதேச அளவில் சந்தேகங்கள் எழுகின்றன. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி  பாகிஸ்தான்  தனக்கென சொந்த வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க உதவுவதற்காகவும், பாக்கிஸ்தானிய விஞ்ஞானிகளுக்கு "நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல் தொடர்புகளை கையாள்வது பற்றிய விரிவான பயிற்சியையும் வுஹான் ஆய்வகம் வழங்கியுள்ளது. 

 இதுகுறித்து உளவு துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, வைரஸ்களின் மரபணுக்களை ஆராய்தல், ஆபத்தான நுண்ணுயிரிகளை அணுகுதல், தொற்று நோய்களுக்கான மரபணு கழிவுகளை பயன்படுத்துவதற்கான திறனை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு அம்சங்கள் அந்த பயிற்ச்சியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதில் சீனாவின் ஈடுபாட்டை வைத்துப் பார்க்கும்போது, இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளை குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.  குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை ஈடுபடுத்துவது சீனாவின் முக்கிய திட்டமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சீனா பாகிஸ்தான் உயிரியல் திட்டத்தில் ஏற்கனவே கிரிமியன் காங்கோ அதாவது ரத்தக்கசிவு காய்ச்சல் வைரஸ்  (சி.சி.எச்.எஃப்.வி)  மீதான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காய்ச்சல் பரவும் பட்சத்தில் அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களில் 25 சதவீதம் அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்தவை என அஞ்சப்படுகிறது.