செவ்வாய்க் கிரகத்தில் மறைந்திருக்கும் பெருங்கடல்! மனித குடியேற்றம் சாத்தியமா?
நாசாவின் புதிய ஆய்வில் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பிற்குக் கீழ் கடலளவு நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் செவ்வாயில் மனிதர்கள் குடியேற்றம் தொடர்பான ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் உள்ள கரடுமுரடான, பழுப்பு நிற பாறைகளைக் கொண்ட மேற்பரப்புக்குக் கீழ் நீரோடைகள் இருக்கிறது என்றும் அவை ஒரு கடலுக்கு நிகரான நீரைக் கொண்டிருக்கலாம் எனவும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.
செங்கோள் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்த நாசாவின் இந்தக் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் அங்கு மனித குடியேற்றத்துக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை விவரிக்கிறது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது எப்படி?
நாசாவின் விண்வெளி ரோபோடிக் எக்ஸ்ப்ளோரர், இன்சைட் லேண்டர், 2018இல் செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இது அந்தக் கிரகத்தில் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தது. இந்த லேண்டர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் செயல்பாட்டை நிறுத்தியது. அதற்கு முன்பு 1,300 க்கும் மேற்பட்ட தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.
எலிசியம் பிளானிஷியா எனப்படும் செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சமவெளியில் இருந்து இன்சைட் லேண்டர் தரவுகளை சேகரித்தது. இந்தத் தரவை கணினி மாதிரிகளுடன் இணைத்து ஆய்வுக்கு உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் நிலத்தடி நீர் இருப்பது செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கணித்தனர்.
நாசா 2015ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் உப்புநீர் இருப்பதைக் கண்டறிந்தாலும், சமீபத்திய கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்உத 11.5 கி.மீ. முதல் 20 கி.மீ. ஆழத்தில் அதிக அளவு தண்ணீர் இருப்பதை உணர்த்தியுள்ளது.
வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவில் என்ன இருக்கிறது? அமெரிக்கா குறி வைப்பது எதற்காக?
கடலளவு நீர் இருக்கலாம்!:
நாசா மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் முதன்மை விஞ்ஞானி வாஷன் ரைட், எலிசியம் பிளானிஷியாவில் சேகரிக்கப்பட்ட இன்சைட் லேண்டரின் தரவு செவ்வாய் கிரகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தினால், ஒரு பெருங்கடல் அளவுக்கு நீர் இருக்கும் என்று சொல்கிறார்.
ஆனால், நீரின் இருப்பை மேலும் ஆராய்ந்து உறுதிப்படுத்துவதற்கு இன்னும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு கூடுதலாக பல உபகரணங்கள் தேவைப்படும் என்றும் அவர் சொல்கிறார்.
நீண்ட காலமாகவே, செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒருவேளை இப்போதும் போதுமான அளவு நீர் இருக்கலாம். கடந்த ஆண்டு கூட செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த சீனாவின் மார்ஸ் ரோவர், நினைத்ததை விட மிகவும் பரவலாக நீர் இருக்கலாம் என்று கண்டறிந்தது.
செவ்வாய் கிரகம் தனது வளிமண்டலத்தை இழந்தபோது அதில் இருந்த நீரை இல்லாமல் போயிருக்கலாம் என்று கணிப்பு உள்ளது என்றும் விஞ்ஞானி வாஷன் ரைட் குறிப்பிடுகிறார்.
செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தை இழந்தது எப்படி?
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் அலஸ்டர் கன், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற வலுவான காந்தப்புலம் இருப்பதாக கூறுகிறார். பூமியின் மையத்தில் உருகிய இரும்பின் இயக்கம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. இது காஸ்மிக் கதிர்வீச்சில் இருந்தும் சூரியப் புயலில் இருந்தும் பாதுகாக்கிறது.
ஆனால், செவ்வாய் கிரகத்தின் உள்பகுதி குளிர்ந்ததால் இந்தக் காந்தப்புலத்தை அணைந்துவிட்டது. இதனால் சூரியப் புயலின் தாக்கத்தால் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் அகற்றப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
பிரிட்ஜுக்குப் பின்னால் 10 ஆண்டுகள் சிக்கி இருந்த இளைஞர்! அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது சாத்தியமா?
2020ஆம் ஆண்டில் ஏவப்பட்ட பெர்செவரன்ஸ் ரோவர் எனப்படும் நாசா ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. "மனித இருப்புக்கும், ராக்கெட் எரிபொருளை தயாரிப்பதற்கும் ஏதேனும் ஒரு வடிவத்தில் தண்ணீர் தேவை. தற்போதைய நிலையில் இருந்து செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவம் காலத்திகுக வெகுதூரம் உள்ளது" என்று நாசாவுடன் பணிபுரிந்த விண்வெளி விஞ்ஞானி அமிதாபா கோஷ் சொல்கிறார்.
விண்வெளித் துறையில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர் எலான் மஸ்க் தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் கீழ் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
ஸ்பேஸ்எக்ஸ் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக செவ்வாய் நகரத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்கவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் அணிவதற்கான ஸ்பேஸ் சூட்களையும் உருவாக்கி வருகின்றனர்.
“ஆறு மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு 200 பேரை ஏற்றிச் செல்லும் ஸ்டார்ஷிப் ஒன்றை எலான் மஸ்க் தயாரித்து வருகிறார்”என்றும் விஞ்ஞானி அமிதாபா கோஷ் சுட்டிக்காட்டுகிறார்.
எலான் மஸ்க் மட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகமும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வது தொடர்பான விண்வெளித் திட்டத்தை வைத்திருக்கிறது. அந்நாட்டின் முகமது பின் ரஷீத் விண்வெளி மையம், செவ்வாய் கிரகத்தில் 2117ஆம் ஆண்டுக்குள் மனிதக் குடியேற்றத்தை நிறுவும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
"இன்னும் 10-15 ஆண்டுகளில், செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது என்பது அறிவியல் புனைகதை போல் தோன்றாது" என அமிதாபா கோஷ் தெரிவிக்கிறார்.
செவ்வாய் கிரகத்தில் அனைவரும் வாழ முடியுமா?
செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்கள் உருவானாலும், பெரும்பாலான மக்கள் அங்கு வாழ்வதற்கு சாத்தியமில்லை. விண்வெளி பயணங்களுக்கு ஆகும் செலவு மிக அதிகம். 2011ஆம் ஆண்டில், கனடா நாட்டு கோடீஸ்வரர் லாலிபர்டே விண்வெளிக்குச் செல்ல 35 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி இருக்கிறார்.
லாஸ் வேகாஸைச் சேர்ந்த பிக்லோ ஸ்பேஸ் ஆபரேஷன்ஸ் (பிஎஸ்ஓ) நிறுவனம் 2019ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பார்வையிட ஒரு நபருக்கு 52 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது.
சில சிந்தனையாளர்கள் பூமியின் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவித்த பிறகு மனிதர்கள் இன்னொரு கிரகத்துக்குச் செல்வது சரியானதா என்று கேள்வி எழுப்புகின்றனர். மினசோட்டாவின் செயின்ட் பால் கல்லூரியின் தத்துவவியல் பேராசிரியர் இயன் ஸ்டோனர், செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்களை நிறுவுவதற்கு தார்மீக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்து ஒரு கட்டுரையை எழுதினார். "செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவது அந்த கிரகத்தின் சுற்றுச்சூழல் குறிப்பிடத்தக்க பாதிப்பு அல்லது அழிவை உருவாக்கும்" என எச்சரிக்கிறார்.
SIP முதலீடு மூலம் பல லட்சம் சேமிக்கலாமா... அது எப்படி வேலை செய்யுது? முதலீடு செய்வது எப்படி?