modi gift
ஆங்சான் சூகியை நெகிழ வைத்த பிரதமர் மோடியின் பரிசு
மியான்மர் நாட்டுக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அவருக்கு அங்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த நாட்டின் அரசு ஆலோசகரும் ஜனநாயக தலைவருமான ஆங் சான் சூகியை நேற்றுசந்தித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, இரு தரப்பு நாடுகளின் உறவுகள், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்டவை குறித்து இருதலைவர்களும் ஆலோசித்தனர். இரு தரப்பு நாடுகளுக்கு இடையே 11 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின.
இதனிடையே மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரும் ஜனநாயக தலைவருமான ஆங் சான் சூகிக்கு அவரை நெகிழ வைக்கும் வகையில் பிரதமர் மோடி பரிசு ஒன்றை அளித்தார். கடந்த 1986-ல் ஆன் சாங் சூகி சமர்ப்பித்த ஆராய்ச்சி படிப்பு அறிக்கையை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார்.
சிம்லாவில் உள்ள சிறப்பு உயர் படிப்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தி்ல் மியான்மரின் தற்போதைய அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி கல்வி பயின்று ஆராய்ச்சி அறிக்கையை 1986-ம் ஆண்டு சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் மியான்மர் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி ஆங் சான் சூகியை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது , சிம்லா கல்வி நிறுவனத்தில் அவர் சமர்ப்பித்திருந்த அந்த ஆய்வு அறிக்கையின் உண்மை நகலை பிரதமர் மோடி அன்பளிப்பாக வழங்கினார். பிரதமர் மோடி வழங்கிய இந்த பரிசைப் பெற்றுக்கொண்ட சூகி நெகிழ்ந்துபோனார்.
