ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இரண்டு மர்ம நபர்கள் நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி நகரின் பிரபலமான போண்டி (Bondi) கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் போண்டி கடற்கரையில், இன்று ஏராளமானோர் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் கடற்கரைப் பகுதி முழுவதும் பீதியும் பரபரப்பும் நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அப்பகுதியைச் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் அதிர்ச்சி பதிவு

ஆஸ்திரேலியாவில் அரிதாக நிகழும் இத்தகைய கோரத் தாக்குதலுக்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்தே எனது எண்ணம் முழுவதும் உள்ளது. அங்குள்ள காவல் அதிகாரிகளுடன் பேசி, சூழல் குறித்த தகவல்களைத் தொடர்ந்து பெற்று வருகிறேன். துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிக்கு அருகில் உள்ள மக்கள், காவல்துறையினரின் அறிவுறுத்தலைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

விசாரணை தீவிரம்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார்?, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் பயங்கரவாத நோக்கம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் குறித்து சிட்னி போலீசார் விரைவில் அதிகாரப்பூர்வ கூடுதல் தகவல்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.