அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 70 க்கும் மேற்பட்ட பள்ளித் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், ரோட் ஐலண்ட் மாநிலத்தில் உள்ள பிராவிடன்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் பாரஸ் & ஹோலி பொறியியல் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
'பாரஸ் & ஹோலி பொறியியல் கட்டடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததை நாங்கள் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் 8 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். துப்பாக்கிசூடு நடத்தியவரை தேடி வருகிறோம்'' என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் பாரஸ் & ஹோலி பொறியியல் கட்டடத்திற்குள் இருந்து, பின்னர் அப்பகுதியை விட்டு வெளியேறிய மாணவர்கள் அல்லது பிரவுன் சமூக உறுப்பினர்கள் யாரேனும் இருந்தால், காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பி ஓட்டம்
பிராவிடன்ஸ் துணை போலீஸ் தலைவர் டிம் ஓ'ஹாரா கூறுகையில், ''துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கருப்பு உடை அணிந்த ஒரு ஆண் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த சந்தேக நபரைக் கண்டுபிடிக்க நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். சந்தேக நபர் பிரவுன் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் எப்படி நுழைந்தார்? என்பது குறித்து விசாரிக்கிறோம்'' என்றார். அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு ஹோப் ஸ்ட்ரீட் வழியாக வெளியேறியதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
யார் அந்த நபர்?
துப்பாகிச்சூடு நடந்த பல்கலைக்கழகத்திலிருந்து சில தெருக்கள் தள்ளி ஒரு நபருடன் காவல்துறை அதிகாரிகள் மோதலில் ஈடுபட்டனர். இது துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்தது. ஆனால் அந்த சம்பவம் பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என சி.என்.என் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பழமையான பல்கலைக்கழகம்
துப்பாக்கிச்சூடு நடந்த பிரவுன் பல்கலைக்கழகம் ஒரு தனியார் ஐவி லீக் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் பழமையான உயர்கல்வி மையங்களில் ஒன்றாகும். 1965 இல் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் 117 ஆய்வகங்கள், 150 அலுவலகங்கள், 15 வகுப்பறைகள், 29 ஆய்வக வகுப்பறைகள் மற்றும் மூன்று விரிவுரை அரங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


