மியான்மர் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி பற்றி எந்த தகவலும் இல்லாததால், அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை என அவரது மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார். 

மியான்மரின் இராணுவத்தால் சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (80) பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால், அவர் உயிருடன் இருக்கிறாரா இறந்துவிட்டாரா என்றே தெரியவில்லை என அவரது மகன் கிம் அரிஸ் கவலை தெரிவித்துள்ளார்.

கிம் அரிஸ், 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகளாக தனது தாயுடன் பேசவில்லை என்றும், அவரது இதயம், எலும்பு மற்றும் ஈறு பிரச்சனைகள் குறித்து சில நேரங்களில் மறைமுகத் தகவல்கள் மட்டுமே கிடைப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அபாயகரமான நிலை

டோக்கியோவில் கிம் அரிஸ் அளித்த பேட்டியில், ஆங் சான் சூச்சிக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சனைகள் உள்ளன என்றார். “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரை யாரும் பார்க்கவில்லை. அவரது வழக்கறிஞர்களைக்கூடச் சந்திக்க அனுமதிக்கவில்லை, குடும்பத்தினரைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவரைப் பற்றி ஏதும் தெரியவில்லை. அவர் ஏற்கனவே இறந்திருக்கவும் கூடும்," என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தேர்தல் ஒரு வாய்ப்பு?

இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் இந்த மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இராணுவம் நடத்தும் தேர்தல் குறித்து அவநம்பிக்கை கொண்டிருந்தாலும், இந்தத் தேர்தல் தனது தாயின் விடுதலைக்கு ஒரு வாய்ப்பை வழங்கக்கூடும் என்றும் கிம் அரிஸ் நம்புகிறார்.

மியான்மர் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங் தேர்தலுக்கு முன்னரோ பின்னரோ ஆங் சான் சூச்சியை விடுதலை செய்யலாம். அல்லது வீட்டுக் காவலுக்கு மாற்றலாம். அதன் மூலம் பொதுமக்களை திருப்திப்படுத்த முயற்சி செய்யலாம் என்பது கிம் அரிஸின் நம்பிக்கையாக உள்ளது.

27 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மியான்மர் தொடர்ந்து குழப்பத்தில் உள்ளது. ஊழல், தேர்தல் மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆங் சான் சூச்சிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுக்கிறார்.

தற்போது உலகெங்கிலும் பல மோதல்கள் நடப்பதால், மக்கள் மியான்மரை மறந்துவிடுவார்களோ என்று கிம் அரிஸ் கவலைப்படுகிறார். இராணுவம் நடத்தவிருக்கும் தேர்தலை ஒரு சிறிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஜப்பான் போன்ற வெளிநாட்டு அரசுகள் இராணுவ ஆட்சியின் மீது மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது தாயை விடுதலை செய்யக் கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

வீட்டுக் காவலும் விடுதலையும்

ஆங் சான் சூச்சி இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஒரு தேர்தலுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார், அப்போது அவர் யாங்கோனில் உள்ள தனது வீட்டுக் காவலில் இருந்து விடுபட்டார். 2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு அவர் மியான்மரின் நடைமுறைத் தலைவரானார். இருப்பினும், ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளால் அவரது உலகளாவிய மதிப்பு பின்னாளில் களங்கமடைந்தது.