பிரான்சின் டொசுலே நகரில் 1970களில் இயேசு தோன்றியதாகக் கூறப்பட்டதை கத்தோலிக்கர்கள் நம்பத் தேவையில்லை என வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் பிரார்த்தனைகளுக்கு இயேசு பதிலளிக்கலாம் என்றும் வாடிகன் தெளிவுபடுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டொசுலே (Dozulé) என்ற சிறிய நகரத்தில் இயேசு கிறிஸ்து விசேஷமாகத் தோன்றியதாகக் கூறப்படும் கதைகளை, கத்தோலிக்கர்கள் உண்மையாகக் கருதத் தேவையில்லை என்று வாடிகன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பிரார்த்தனைகளுக்கு இயேசு பதிலளிக்கலாம், ஆனால் அவர் அங்கே நேரில் தோன்றவில்லை என்றும் வாடிகன் கூறியுள்ளது.
போப் லியோவால் (Pope Leo) அங்கீகரிக்கப்பட்ட புதிய உத்தரவில், வாடிகன் உயர் கோட்பாட்டு அலுவலகம், பிரான்ஸ் நாட்டின் டொசுலே நகரில் இயேசு தோன்றியதாகக் கூறப்படும் கதைகளை உலகின் 140 கோடி கத்தோலிக்கர்களும் உண்மையானதாகக் கருதத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
வாடிகான் அறிவிப்பின் பின்னணி என்ன?
டொசுலே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்கத் தாய், 1970களில் 49 முறை இயேசுவைக் கண்டதாகத் தெரிவித்ததுடன், இயேசு தனக்கு தொடர்ந்து நற்செய்திகளை வழங்கியதாகவும் கூறினார். நகரில் உள்ள ஒரு மலையில் 7.38 மீட்டர் (24.21 அடி) உயரமுள்ள ஒரு சிலுவையைக் கட்டச் சொன்னதாகவும் கூறியிருந்தார்.
நற்செய்திகளை வழங்குவதற்கோ, புதிய பிரார்த்தனை நடைமுறைகளை உருவாக்குவதற்கோ, அல்லது பொதுவான முறையீடுகளுக்காகவோ இயேசுவும் மேரியும் அமானுஷ்யமாகத் தோன்ற முடியும் எனக் கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். ஆனால் டொசுலே சம்பவத்தை வாடிகன் நிராகரித்துள்ளது.
முன்னறிவிப்பு நிறைவேறவில்லை
உலகம் 2000ஆம் ஆண்டுக்கு முன் முடிவுக்கு வரும் என்று இயேசு முன்னறிவித்ததாகவும் சொல்லப்பட்டது ஆனால், அது நிறைவேறாமல் போனது பற்றியும் வாட்டிகன் சுட்டிக்காட்டியுள்ளது.
1531 இல் மெக்ஸிகோவில் தோன்றிய Our Lady of Guadalupe என்ற மேரியின் தோற்றமும் 1930களில் போலந்து சகோதரி ஃபவுஸ்டினா கோவல்ஸ்காவுக்கு இயேசு காட்சியளித்ததும் வாடிகனால் அங்கீகரிக்கப்பட்டவை நிகழ்வுகளாகும்.
