அனிமேஷன் ஸ்டுடியோவில் பயங்கர தீ விபத்து... 34 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. இதில், பலர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. இதில், பலர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3 தளங்களுடன் மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்ட இந்த அனிமேஷன் ஸ்டூடியோ நேற்று முன்தினம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஸ்டூடியோவில் திடீரென தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென ஸ்டூடியோ முழுவதும் பரவியது. அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பலநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய 35 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் தீ பற்றும் திரவம் ஒன்றை அந்தக் கட்டிடத்தில் மர்ம நபர் வீசிவிட்டு அதில் தீ வைத்ததாக கூறப்படுகிறது.