வடக்கு ஜப்பான் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் இவாடே மாகாணத்தில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

வடக்குப் ஜப்பான் கடற்கரைப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக இவாடே மாகாணம் முழுவதும் கட்டிடங்கள் குலுங்கின.

நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஒரு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஜப்பான் நாட்டு நேரப்படி, ஞாயிறு மாலை 5:03 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவானது என்றும் சன்ரிகுக்கு (Sanriku) அப்பால் பசிபிக் கடற்பகுதியில், சுமார் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

சுனாமி எச்சரிக்கை

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வடக்கு கடற்கரைப் பகுதிகளுக்கு 1 மீட்டர் (சுமார் 3 அடி) உயரம் வரை சுனாமி அலைகள் எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுத்தது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் இந்த எச்சரிக்கை நீடித்தது.

ஒஃபுனாடோ, ஓமினாடோ, மியாகோ மற்றும் கமாஷி ஆகிய துறைமுகங்களில் சிறிய சுனாமி அலைகள் பதிவாகின. குஜி (Kuji) பகுதியில் அலைகளின் உயரம் 20 சென்டிமீட்டர் வரை இருந்தது.

ஜப்பானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்.கே (NHK), கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவசர வேண்டுகோள் விடுத்ததுடன், மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தது.

நிலநடுக்கப் பாதிப்புகள்

இந்த அதிர்வு காரணமாக புல்லட் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின் தடை பாதிப்புகளும் ஏற்பட்டன. நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் சுனாமி அலைகள் பல மணி நேரம் தொடரக்கூடும் என்றும், காலப்போக்கில் அவற்றின் உயரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஜப்பான், பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையம்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ள நாடாகும். இந்த பிராந்தியத்தில் 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.