ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 260 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான சமங்கன் மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சுமார் 5.23 லட்சம் மக்கள் வசிக்கும் மஜார்-இ-ஷெரீப் என்ற நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் உடனடியாக வீட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், நிலநடுக்கம் தாக்கியபோது பதிவான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…

பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

நிலநடுக்கத்தால் பால்க் மற்றும் சமங்கன் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தாலிபன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்னும் ஏராளமான மக்கள் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தாலிபன் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 320 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அமெரிக்காவின் புவியியல் அமைப்பு (USGS) கூறியுள்ளது. ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

நிலநடுக்கத்தால் நீல மசூதி சேதம்

மசார்-இ ஷெரீப்பில் உள்ள புனிதத் தலமான நீல மசூதியின் ஒரு பகுதியை பூகம்பம் சேதப்படுத்தியதாக பால்க் மாகாண செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் தெரிவித்துள்ளார்.

இந்த மசூதி ஆப்கானிஸ்தானின் புனிதமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் இது நபிகள் நாயகத்தின் உறவினர் அடக்கம் செய்யப்பட்ட இடமாக நம்பப்படுகிறது. இந்த மசூதியின் தற்போதைய கட்டமைப்பு 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் தலைநகர் காபூல் உட்பட நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தேசிய மின்விநியோக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய நாடு. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.