டிரேக் பாஸேஜில் 7.5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலி மற்றும் அர்ஜெண்டினாவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Massive 7.5 Magnitude Earthquake Struck The Drake Passage: தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிக்காவிற்கும் இடையேயுள்ள டிரேக் பாஸேஜில் 7.5 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 36 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) சிலி கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதேபோல் அர்ஜெண்டினாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரத்திலிருந்து தென்கிழக்கே 700 கிமீ (435 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

மூன்று மணி நேரத்திற்குள் சிலி கடற்கரைகளில் ஆபத்தான சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. சிலி அண்டார்டிக் பகுதியில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிலியின் கடற்படை ஹைட்ரோகிராஃபிக் மற்றும் கடலியல் சேவை மக்களுக்கு அறிவுறுத்தியது. அதே வேளையில் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு இந்த நிலநடுக்கத்திற்கு மற்ற பகுதிகளுக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி

தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள டிரேக் பாதை, அதன் சிக்கலான டெக்டோனிக் அமைப்பின் காரணமாக நில அதிர்வு ரீதியாக செயல்படும் பகுதியாகும். ஆகவே அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், தீவுகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்பதை ஹவாயில் உள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அதிவேமாக அதிகரித்து வரும் நில அதிர்வுகள்

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளுக்கு பெயர் பெற்ற பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் நில அதிர்வுகள் அதிவேமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை மாத தொடக்கத்தில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து சுமார் 74 மைல் தொலைவில் 13 மைல் ஆழத்தில் ஏற்பட்டது. இது சில ரஷ்ய கடலோரப் பகுதிகளில் 13.1 அடி வரை சுனாமி அலைகளை உருவாக்கியது. மேலும் சிறிய அலைகள் ஜப்பான் மற்றும் ஹவாயையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.