பஹல்காம் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பஹவல்பூரில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் புகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. முசாஃபராபாத், கோட்லி மற்றும் பஹவால்பூரின் அகமது கிழக்குப் பகுதி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 14 பேர் பஹவல்பூரில் பலி

இந்த நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேரும், நான்கு நெருங்கிய உதவியாளர்களும் பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் இந்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் குறிவைத்தன. இவற்றில் ஒரு முகாம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூரில் அமைந்துள்ளது, இது ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகம் என்று கருதப்படுகிறது. அதில் சுப்ஹான் அல்லா வளாகத்தில் நடத்தப்பட்ட பஹவல்பூர் தாக்குதல் ஒருங்கிணைந்த தாக்குதலில் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும்.

ஜெய்ஷ்-இ-முகமது அறிக்கை

ஜெய்ஷ்-இ-முகமது ஒரு செய்திக் குறிப்பில், வான்வழித் தாக்குதலில் மௌலானா காஷிஃப் முழு குடும்பத்தினர், மசூத் அசாரின் மூத்த சகோதரி, முஃப்தி அப்துல் ரவூஃப் பேரக்குழந்தைகள், பாஜி சதியாவின் கணவர் மற்றும் மூத்த மகளின் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும், இன்று அடக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.