ஐ.நா. பொருளாதாரத் தடைகளால் மதிப்பிழந்த ஈரான், தனது தேசிய நாணயமான ரியாலில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நாணய சீர்திருத்தம் பொருளாதார பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் நாடாளுமன்றம், தேசிய நாணயமான ரியாலில் (Rial) இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டத்திற்கு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொருளாதாரத் தடைகளால் நாட்டின் நாணயம் கடுமையாக மதிப்பிழந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4 பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டம்

பொருளாதார பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றக் குழு இரண்டு மாதங்களுக்கு முன் புத்துயிர் அளித்திருந்த நிலையில், தற்போது சட்டமியற்றுபவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, தற்போது புழக்கத்தில் உள்ள 10,000 ரியாலுக்குப் பதிலாக ஒரு புதிய ரியால் அறிமுகப்படுத்தப்படும்.

இரு நாணய வகைகளும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை புழக்கத்தில் இருக்கும், இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த மத்திய வங்கிக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய ரியால் மதிப்பின் கடும் வீழ்ச்சி

ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளதால், ரியாலின் மதிப்பு கறுப்புச் சந்தையில் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தத் திட்டம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அமெரிக்க டாலருக்கு சுமார் 9,20,000 ரியாலாக இருந்த மதிப்பு, ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 11,15,000 ரியாலாக வர்த்தகம் ஆனது.

முன்னதாக, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள், கடந்த மாதம் "ஸ்னாப்பேக்" (Snapback) எனப்படும் தடையை மீண்டும் அமல்படுத்தும் வழிமுறையைத் தூண்டி, ஈரானின் ஒத்துழையாமைக்காக சர்வதேசத் தடைகளை மீட்டெடுத்தன.

நாணயத்தில் பூஜ்ஜியங்களை நீக்கும் இந்தத் திட்டம் 2019 ஆம் ஆண்டிலேயே முதன்முதலில் முன்மொழியப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த கட்டம் என்ன?

இந்த மசோதா இன்னும் கார்டியன் கவுன்சில் (Guardian Council) எனப்படும் சட்ட மேற்பார்வைக் குழுவின் ஒப்புதலையும், அதிபர் மசூத் பெஸெஷ்கியனின் (Masoud Pezeshkian) கையெழுத்தையும் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும்.

அன்றாட வாழ்க்கையில், ஈரானியர்கள் ஏற்கனவே ரியாலில் இருந்து ஒரு பூஜ்ஜியத்தை நீக்கி, மீதமுள்ள தொகையை டோமன் (Toman) என்ற பெயரில் பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.