பிரபல இந்திய பயண யூடியூபரான அனந்த் மிட்டல், சீனா சென்றபோது குவாங்சோ விமான நிலையத்தில் 15 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அருணாச்சல பிரதேசம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோக்களே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பிரபல இந்திய பயண யூடியூபரான அனந்த் மிட்டல், சீனாவில் கைது செய்யப்பட்டு 15 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விமான நிலையத்தில் நடந்த சம்பவம்
அனந்த் மிட்டல் On Road Indian என்ற யூடியூப் சேனல் நடந்திவருகிறார். இவர் தனது நண்பர் ஒருவரைச் சந்திக்க சீனா சென்று, குவாங்சோ (Guangzhou) விமான நிலையத்தில் அங்குள்ள குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சுமார் 15 மணிநேரம் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்ட அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும், 29 மணிநேரம் கழித்தே அவர் உணவு உண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு அதிகாரிகள் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அவரது கேமராக்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
"இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்"
"அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சீனாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்பதைப் பிறகு உணர்ந்தேன்," என்று அனந்த் தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் வீடியோவில் கண்கலங்கியபடி பேசிய அனந்த், கண்ணீர் மல்க தனது கையறு நிலையை வெளிப்படுத்தினார்.
"நான் ஒரு சாதாரண யூடியூபர். எந்த அரசியல் உள்நோக்கமும் எனக்கு இல்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களில் தலையிட்டது என் தவறுதான். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்," என்று அவர் அந்த வீடியோவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
'பிச்சைக்காரர்' வீடியோ
அனந்த் மிட்டல் அருணாச்சல் விவகாரத்தைக் குறிப்பிட்டாலும், அவர் சீனாவுக்கு எதிராகப் பதிவிட்ட பழைய வீடியோக்களும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உள்ள பிச்சைக்காரர்கள் கூட டிஜிட்டல் முறையில் பணம் பெறுகிறார்கள் என அவர் முன்பு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இது அந்த நாட்டின் பிம்பத்தைச் சிதைப்பதாகச் சீனா கருதியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ள அனந்த், தனது அடுத்த பயணத்தை ரஷ்யாவிற்குத் திட்டமிட்டுள்ளார்.


