லண்டனில் உள்ள KFC-ல் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன், இனவெறி மற்றும் தவறான பணிநீக்கத்திற்கு உள்ளானார். அவரது மேலாளர் இனவெறி வார்த்தைகளால் அவமதித்ததாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

லண்டனில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு இனவெறி மற்றும் தவறான பணிநீக்கம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பெரிய நியாயத்தை வழங்கியுள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள கேஎப்சி (KFC) அவுட்லெட்டில் பணியாற்றிய மதீஷ் ரவிச்சந்திரன் என்பவருக்கு, சுமார் 67,000 பவுண்ட், இந்திய மதிப்பில் ரூ.81 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன், தன்னிடம் பணிபுரிந்த மேலாளர் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தி அவமதித்ததாகவும், அநியாயமாக பணிநீக்கம் செய்ததாகவும் புகார் அளித்தார். அவரது மேலாளர், "அடிமை", "இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்" போன்ற சொற்களை பயன்படுத்தி அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு நெக்சஸ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் தீர்ப்பாய நீதிபதி பால் அபோட், மதீஷ் ரவிச்சந்திரனின் புகார்கள் உண்மையானவை என்றும், அவர் நேரடியாக இன அடிப்படையிலான பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார். இந்தியர் என்பதாலேயே அவரது விடுப்பு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழ் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஜனவரியில் மேற்கு விக்காம் பகுதியில் உள்ள KFC அவுட்லெட்டில் பணியைத் தொடங்கிய மதீஷ், தொடர்ந்து அதிக நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதால் ஜூலை மாதம் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பின் தொலைபேசி அழைப்புகளில் கூட மேலாளர் இனவெறி மற்றும் மிரட்டல் மொழியைப் பயன்படுத்தியதாக நீதிமன்றம் பதிவு செய்தது.

இந்த நடத்தை, ஊழியரின் மரியாதையை சீர்குலைக்கும் வகையிலானது என்றும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார நோட்டீஸ் கூட மறுக்கப்பட்டதாகவும் தீர்ப்பாயம் தெரிவித்தது. இதனால் அவர் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்றம் முடிவு செய்தது.

இறுதியாக, ரூ.62,690 பவுண்ட் இழப்பீடு, விடுப்பு சம்பளம் உள்ளிட்ட தொகைகள் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், பணியிடங்களில் இனவெறி தடுப்பு குறித்து ஊழியர்கள் மற்றும் மேலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை ஆறு மாதங்கள் செயல்படுத்த வேண்டும் எனவும் நெக்சஸ் புட்ஸ் லிமிடெட்-க்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.