துபாயில் நீண்ட காலம் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஓட்டுநர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆகிய இரு இந்தியர்கள் 'பிக் டிக்கெட்' வாராந்திர குலுக்கலில் தலா 100,000 திர்ஹம் (சுமார் ரூ. 24 லட்சம்) வென்றுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட காலமாக ஓட்டுநராகப் பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த இந்தியருக்கு, பெரும் அதிர்ஷ்டமாக 'பிக் டிக்கெட்' குலுக்கலில் சுமார் ரூ. 24 லட்சம் (100,000 திர்ஹம்) பரிசு கிடைத்துள்ளது.

விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

கேரளாவைச் சேர்ந்த பஷீர் கைப்புரத் (57) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து 'பிக் டிக்கெட்' குலுக்கலில் பங்கேற்று வந்த இவருக்கு, தற்போது 276640 என்ற எண் கொண்ட டிக்கெட் மூலம் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியுள்ளது.

வெற்றி குறித்து பஷீர் கூறுகையில், “ஆரம்பத்தில் என்னால் இதை நம்பவே முடியவில்லை. பிக் டிக்கெட் தொகுப்பாளர் அழைத்தபோது, இது உண்மையா என்று மீண்டும் மீண்டும் கேட்டேன். பிறகு தான் உறுதிப்படுத்திக் கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” எனத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள இந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை, இந்தியாவில் இருக்கும் தனது குடும்பத்தின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாக பஷீர் தெரிவித்துள்ளார். மேலும், "பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும்" என்று நம்பும் அவர், தொடர்ந்து இப்போட்டியில் பங்கேற்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

மற்றொரு இந்தியருக்கும் ஜாக்பாட்!

இதேபோல், குஜராத்தைச் சேர்ந்த ரிதேஷ் தனக் (52) என்ற கணினி ஆசிரியரும் வாராந்திர குலுக்கலில் 100,000 திர்ஹம் வென்றுள்ளார். 30 ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கும் இவர், தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கிய டிக்கெட்டிற்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

முதலில் இந்த முறை டிக்கெட் வாங்கும் எண்ணம் இவருக்கு இல்லை என்றும், 'இரண்டு டிக்கெட் வாங்கினால் மூன்று இலவசம்' என்ற சலுகை அழைப்பு வந்ததால் நண்பர்களுடன் சேர்ந்து வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த ஒரு முடிவு அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது.

பிக் டிக்கெட் (Big Ticket)

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'பிக் டிக்கெட்', ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகவும் பிரபலமான குலுக்கல் முறையாகும். இதில் மாதாந்திர கிராண்ட் பிரைஸ் 25 மில்லியன் திர்ஹம் வரை வழங்கப்படுகிறது.

பணம் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ (BMW), லேண்ட் ரோவர் போன்ற சொகுசு கார்களும் பரிசாக வழங்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது அபுதாபி விமான நிலையத்திலோ டிக்கெட்டுகளை வாங்க முடியும்.