Asianet News TamilAsianet News Tamil

இலங்கையின் புதிய பிரதமராக டாக்டர் ஹரினி அமரசூரியா; யார் இவர்?

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் ஹரினி அமரசூரியா, இலங்கையின் 16வது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் அதிபர் அனுரா குமார திசநாயகே முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

Harini Amarasuriya sworn in as New Prime Minister of Sri Lanka
Author
First Published Sep 24, 2024, 3:44 PM IST | Last Updated Sep 24, 2024, 3:47 PM IST

கொழும்பு: தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினரும், புகழ்பெற்ற கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான டாக்டர் ஹரினி அமரசூரியா, இலங்கையின் 16வது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (செப். 24) கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் அதிபர் அனுரா குமார திசநாயகே அவரை நியமித்தார். அதன்படி, இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமரானார்.

நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்கள், அறிவியல் & தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடுகள் துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

2020 ஆம் ஆண்டு முதல் தேசிய மக்கள் சக்திக்கான நாடாளுமன்ற உறுப்பினராக அமரசூரியா பணியாற்றி வருகிறார். தனது அரசியல் பங்களிப்புகளுடன், இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் சமூக ஆய்வுகள் துறையில் மூத்த விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது கட்சிக்குள் இடதுசாரி சித்தாந்த நிலைப்பாட்டைக் கொண்ட அவர், தன்னை ஒரு கொள்கைவாதி என்று அடையாளப்படுத்துகிறார். இளைஞர் வேலைவாய்ப்பின்மை, பாலின சமத்துவமின்மை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சிக்காக ஹரினி பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) தலைவர் அனுரா குமார திசநாயகேவுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தது இந்தியா. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அதிபரை சந்தித்த உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, தனிப்பட்ட முறையில் இந்தியாவின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், மேலும் இந்தியாவின் ஆதரவு மற்றும் நல்லெண்ணச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் இடதுசாரி கைக்கு சென்ற ஆட்சி அதிகாரம்; இந்தியாவுக்கு பாதகமா?

ஒரு முக்கிய இடதுசாரி தலைவரான அனுரா குமார திசநாயகே, இலங்கை அதிபர் தேர்தலில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்தார். இதன் மூலம் இலங்கையின் ஒன்பதாவது அதிபரானார். மார்க்சிஸ்ட்-லெனினிசக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் (JVP) தலைவரான அனுரா, இரண்டாவது இடத்தைப் பிடித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்த அதிபராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை முந்தினார். பதிவான மொத்த வாக்குகளில் 51% வாக்குகளை அனுரா பெற்றார். இவரது தாயார் வடமத்திய இலங்கையின் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி மற்றும் தொழிலாளி ஆவார். 1990களில் மாணவர் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அனுரா, 2000 ஆம் ஆண்டில் முதன் முறையாக  நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவையில் பணியாற்றினார். ஆனால் ஒரு வருடம் கழித்து ராஜினாமா செய்தார். 

இலங்கையின் புதிய அதிபராக இடது சாரி தலைவர் அனுர குமார திசநாயகே!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios