இலங்கையில் இடதுசாரி கைக்கு சென்ற ஆட்சி அதிகாரம்; இந்தியாவுக்கு பாதகமா?
இலங்கையின் புதிய அதிபராக இடதுசாரி தலைவர் அனுரா குமார திசநாயகே பதவியேற்றுள்ள நிலையில், இந்தியாவுடனான உறவில் மாற்றங்கள் ஏற்படுமா? சீனாவுடனான நெருக்கம் அதிகரிக்குமா? ராஜபக்சே சகாப்தத்திற்குப் பின்னர், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கையின் புதிய அதிபராக இன்று இடது சாரியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே பதவியேற்றார்.
இந்தியாவில் இருந்து எட்டிப் பிடிக்கும் தூராத்தில் இருக்கிறது இலங்கை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்றில் மட்டுமில்லாது ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சமூக உறவுகள் என்று பல தரப்புகளிலும் உறவுகள் வளர்ந்து வந்து இருக்கிறது. ராமாயணத்தில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பு தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
புத்தமதம்:
இலங்கையின் பெரும்பாலான மக்கள் புத்த மதத்தை தழுவியவர்களாக இருந்தாலும், இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுவரை இருந்த அரசுகளும் இந்தியாவின் உறவை விட்டுக் கொடுக்கவில்லை. நெருக்கடிகள் வந்தபோதும், இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தன. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்து இருக்கும் தேர்தல் இந்தியா, இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இடதுசாரி அதிபர் அனுரா குமார திசநாயகே:
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் இடது சாரி பின்னணி கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், அதிபர் வேட்பாளருமான அனுரா குமார திசநாயகே போட்டியிட்டு வெற்றி பெற்றார். இன்று இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார். இவர் முழுக்க முழுக்க இடது சாரி சித்தாந்தத்தை பின்பற்றுபவர். ஊழலுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்து வந்தவர்.
ராஜபக்சே சகோதர்கள்:
இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே சகோதர்களின் அரசுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினர். அதற்கு பின்னணியில் இருந்தவர் அனுரா குமார திசநாயகே. மகிந்த ராஜபக்சே குடும்ப ஆட்சியால்தான் இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் சரிந்தது என்று கூறி பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து தூக்கி வீசப்பட்டனர். ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
அனுரா குமார திசநாயகே பின்னணி:
இந்தப் பின்னணியில் தான் அதிபருக்கான தேர்தலும் நடந்தது. இடது சாரியைச் சேர்ந்த அனுரா குமார திசநாயகே அதிபராகி இருக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் அரசியலில் இருக்கும் அனுரா குமார திசநாயகேவின் அரசியல் இந்தியாவுக்கு புதிதாக இருக்கப் போகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, சீனாவுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்தியாவை எப்போதும் அவர்கள் பெரிய அளவில் பகைத்துக் கொண்டது இல்லை.
சீனாவுக்கு ஆதரவா?
ஆனால், தற்போது புதிய அரசியல் களத்தை எதிர்நோக்கி இருக்கிறது இந்தியா. இலங்கையின் அதிபராக இடதுசாரி அனுரா குமார திசநாயகே பொறுப்பேற்று இருப்பது தங்களுக்கு சாதகம் என்று சீன அரசியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர். சூழலுக்கு ஏற்ற அரசியலுடன், சீனாவுடன் பெரிய அளவில் நட்புறவை அனுரா தொடருவார் என்றே கூறப்படுகிறது.
இலங்கையின் புதிய அதிபராக இடது சாரி தலைவர் அனுர குமார திசநாயகே!
இந்தியாவுக்கு எதிரானதா ஜனதா விமுக்தி பெரமுனா?:
அனுரா குமாரவின் ஜனதா விமுக்தி பெரமுனா என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியானது வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான கட்சியாகத்தான் பார்க்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இடது சாரி சித்தாந்தம் கொண்டது. இந்தக் கட்சியின் நிறுவனரான ரோஹனா விஜிவீரா 1980களில் இலங்கைக்கு இந்தியா விரோத நாடு என்ற மாயை உருவாக்கி வைத்து இருந்தார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை 1987ஆம் ஆண்டு கடுமையாக விமர்சனம் செய்தவர் தான் ரோஹனா. இந்த ஒப்பந்தம் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும், இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கும் இடையே கையெழுத்தானது. அந்த மாதிரியான ஒரு கட்சியில் இருந்து உருவானவர் தான் அனுரா குமார திசநாயகே. இந்த நிலையில் தான் இலங்கையின் அதிபராக இன்று அனுரா குமார பொறுப்பேற்று இருக்கிறார்.
பெல்ட் அண்டு ரோடு:
இதற்கிடையே கடந்த காலங்களில் இருந்தது போன்று இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளில் பிணைப்பு மேலும் அதிகரிக்கும். சீனாவின் பெல்ட் அண்டு ரோடு திட்டத்திற்கு எந்த இடையூறும் இனி இருக்காது என்றே பார்வையாளர்கள் கூறுகின்றனர். தெற்காசியாவில் சீனா எடுத்திருக்கும் மிகப்பெரிய திட்டம் இது. பல லட்சம் கோடிகளில் இந்தியாவை ஒட்டி அமைக்கப்பட இருக்கும் இந்த சாலை ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அனுராவின் முழக்கம்:
ஆனால், இலங்கையின் உறவில் நல்லுறவு காட்டும் இந்தியாவுடன் இணக்கமான உறவு இருக்கும் என்று அனுரா குமார திசநாயகே தெரிவித்து இருக்கிறார். அதேநேரம், குறிப்பாக இந்தியா, சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு எந்தவொரு ஆளுமைக்கும், அதிகாரத்துக்கும் அடிபணிய மாட்டோம் என்று அனுரா தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில்பைடனுக்கு சிறப்பு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர் மோடி!
இந்தியப் பெருங்கடல்:
அவர் கொடுத்து இருந்த பேட்டியில் கூட, இந்தியா மற்றும் அண்டை மாநிலங்களை மிரட்டும் வகையில் இலங்கையின் நிலம், விமான தளம், கடல் பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். கடந்த காலங்களில் இலங்கையின் கடற்பரப்பை இந்தியாவில் வேவு பார்ப்பதற்காக சீனா பயன்படுத்தி வந்தது. இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது.
சூப்பர் பவர் இந்தியா:
சீனாவும் இடதுசாரி நாடு. தற்போது இலங்கையில் அமைந்து இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியும் மார்க்சிஸ்ட் கட்சி. எனவே, அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக, சித்தாந்தம் ரீதியாக இரண்டு நாடுகளுக்கும் ஒத்துப் போகும். ஏற்கனவே இலங்கையில் துறைமுகங்களை பெரிய அளவில் சீனா அமைத்து வருகிறது. இவற்றை குத்தகைக்கு எடுத்து தனது கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளது. ஆனால், அனுரா கட்சியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து இருந்த கருத்துகளில், ''அண்டை நாடுகளில் இந்தியா சூப்பர் பவர் நாடாக இருக்கிறது. அந்த நாட்டுடன் நட்பு ரீதியில் இருப்பதையே தலைமை விரும்புகிறது'' என்று தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி:
அண்டை நாடுகளுடன் உறவு மேம்படுத்த வேண்டும் என்றே அனுரா விரும்புவார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, சீனாவைக் காட்டிலும் இந்தியா அதிக நிதி கொடுத்தது. அப்படி இருக்கும்போது, தங்களது நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த வேண்டும் என்றுதான் அனுரா விரும்புவார். அண்டை மாநிலங்களை பகைத்துக் கொள்ள மாட்டார். முதலில் உள்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது அவருக்கு சவாலாகவே இருக்கும்.
சீனாவின் கட்டுப்பாட்டில் ஹம்பந்தோட்டா துறைமுகம்:
தலைநகர் கொழும்பில் விமான நிலைய திட்டத்தை கையகப்படுத்தி சீனா தனது தலையீட்டை அதிகரித்து வருகிறது. உலகின் பரபரப்பான கப்பல் பாதையான ஹம்பந்தோட்டா துறைமுகத்தையும் சீனா அமைத்து வருகிறது. ஐரோப்பாவை ஆசியாவுடன் இந்த துறைமுகம் இணைக்கிறது. இதையும் தனது கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வந்துள்ளது. இந்த துறைமுகத்தை தனது நிதியில் அமைத்துக் கொடுத்து, இலங்கையை கடன்கார நாடாக மாற்றி தனது கட்டுப்பாட்டில் இலங்கையை சீனா வைத்துக் கொண்டுள்ளது. இந்த துறைமுகத்தை ராணுவத்திற்கு சீனா பயன்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை விளக்கம் அளித்து இருந்தது.
இலங்கையில் அதானி:
இந்த நிலையில்தான், சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்கு பதிலடியாக, இலங்கையுடனான தனது உறவை வலுப்படுத்த இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில், அதானி குழுமம், அமெரிக்க நிதியுதவியுடன், கொழும்பின் மேற்கில் சர்வதேச முனையத்தை பல மில்லியன் டாலர்கள் செலவில் விரிவாக்கம் செய்வதில் முன்னணியில் உள்ளது.
இந்த முயற்சியானது தெற்காசியாவில் ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கையின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ப்ளூம்பேர்க் தெரிவித்துள்ளது.
இப்படி இலங்கையின் வர்த்தகத்தில் இந்திய நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளன. இத்துடன், இலங்கையின் வடக்கில் அதானி குழுமத்தின் எனர்ஜி நிறுவனத்துக்கு கடந்த ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த திட்டம் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட்டால், சிக்கல் எழும். வாய்ப்பு சீனாவுக்கு செல்லலாம். கடந்த 15 ஆண்டுகளாகவே சீனாவின் பக்கம் இலங்கை சாய்ந்து வருகிறது. இருந்தாலும், ரணில் விக்ரமசிங்கே போன்றவர்கள் இந்தியாவை சிறிது அங்கீகரித்து இருந்தனர். ஆனால், தற்போது இலங்கையில் ஏற்பட்டு அரசியல் மாற்றத்தை இந்தியாவும் உற்று நோக்கி வருகிறது.