பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கான ரூபாயை போர்ச்சுகலுக்கு மாற்றி சொத்துக்கள் வாங்கியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய உளவுத்துறை இதனை சொத்துக்களை மறைக்கும் தந்திரம் என்கிறது.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், நாட்டின் உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத பணத்தை போர்ச்சுகலுக்கு மாற்றி, அங்கு சொத்துக்களை வாங்கியுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்ட அவர், "பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் பலர் போர்ச்சுகலில் கருப்புப் பணத்தைக் கொண்டு சொத்துக்கள் வாங்கியுள்ளனர். மேலும், குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பிடத்தை பெறுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

"அரசியல்வாதிகள் இவர்களால் (உயர் அதிகாரிகளால்) மிஞ்சியதை மட்டுமே பெறுகிறார்கள், ஆனால் எல்லா பழிகளும் அவர்கள் மீதுதான் விழுகின்றன" என்றும் அமைச்சர் கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் பொதுமக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட வேண்டியிருப்பதால், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு குடியுரிமை அல்லது வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்திருப்பதில்லை என்றும் அவர் கூறினார். ஒரு மூத்த அரசு அதிகாரி, தனது மகளின் திருமணத்திற்காக 4 பில்லியன் மதிப்பிலான "சலாமி" (பரிசுகள்) பெற்றதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் மூலம் வரும் பணத்தைக் கொண்டு, அதிகாரிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த இந்திய உளவுத்துறை அதிகாரிகள், இது சொத்துக்களை மறைக்கும் ஒரு தந்திரம் என்று தெரிவித்துள்ளனர். பணமோசடி தடுப்பு அமைப்பான FATF-ன் ஆய்வில் இருந்து தப்பிக்க, போர்ச்சுகல் போன்ற நாடுகளில் முதலீடு செய்யப்படுவதாக்க் கூறப்படுகிறது. ஊழலில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியாகவே பாகிஸ்தான் அமைச்சரே இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் என்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் நீதித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் ஊழல் ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது.