தண்ணி கூட கொடுக்கல... இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் தேவையா? ஓவைசி ஆவேசம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னணியில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார். பயங்கரவாதம் இருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது ஏன் என அவர் அரசை விமர்சித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இச்சூழலில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது ஏன் என ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை
பயங்கரவாதமும் அண்டை நாட்டுடன் நல்லுறவும் ஒருசேர இருக்க முடியாது என்பதே தற்போது இந்தியாவின் நிலைப்பாடு என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மக்களவையில் திங்கள்கிழமை விளக்கமளித்தார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மக்களைவையில் ஓவைசி
இந்த நிலையில், மக்களவையில் பேசிய ஓவைசி, செப்டம்பரில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவதற்கு மத்திய அரசு தடை விதிக்காததைக் கடுமையாகக் கண்டித்தார்.
கிரிக்கெட் மட்டும் தேவையா?
ஓவைசி பேசுகையில், "பாகிஸ்தானுடன் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது; அந்நாட்டுக்கு இங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது; ஆனால், அவர்களுடன் கிரிக்கெட் மட்டும் எப்படி விளையாட வேண்டுமா? இதற்கு யார் பொறுப்பு? பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் இந்தியாவை வலு இழக்கச் செய்ய விரும்புகின்றன" என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த இரட்டை நிலைப்பாடு குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.