Fear Pakistan May Hang Kulbhushan Jadhav Before Decision Says India 10 Facts

இந்திய முன்னாள் விமானப்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில் வாதிட்ட இந்தியா, இந்த விசாரணை முடிவதற்குள் கூட பாகிஸ்தான் ஜாதவின் தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிடும் என அச்சம் கொள்வதாக தெரிவித்தது.

கைது

இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலம்,மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் உளவு பார்த்ததாக அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தூக்கு தண்டனை

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த ராணுவ நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தூக்கு தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய தொடர்ந்த வழக்கில் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி உத்தரவிட்டு, 15-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

18 ஆண்டுகளுக்கு பின்

ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவும், பாகிஸ்தானும் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் நேருக்கு நேர் சந்தித்து வாதிட்டனர். வியன்னா ஒப்பநத்தத்தில் குறிப்பிட்ட விஷயங்களை மீறி பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. விசாரணையை கேலிக்கூத்தாக்கி, ஆதராங்களை இல்லாமல் செயல்படுகிறது என குற்றம்சாட்டியது.

அச்சம்

இதையடுத்து, சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே ஆஜராகி வாதாடினார். மத்திய வௌியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தீபக் மிட்டல் நீதிமன்றத்தில் சில விஷயங்களைத் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ சூழ்நிலை மிகவும் கடுமையாகவும், மிகவும் அவசரமான சூழலிலும் இருப்பதால் நாங்கள் நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம்.

இந்தியர் ஜாதவுக்கு முறைப்படியான சட்ட உதவிகளை பெற அவருக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. முறையான வழக்கறிஞர்கள் வைக்கவும் அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவதற்குள் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என அச்சுறுத்தல் அவருக்கு இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

மீறியதாகும்

இந்தியா தரப்பு வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே 90 நிமிடங்கள் வாதிட்டார். அவர் வாதிடுகையில், “ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது, ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனையை நிறைவேற்றக்கூடாது. இது வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாகும்.

குல்புஷன் ஜாதவ் கைது ெசய்யப்பட்டது கூட அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படாமல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஜாதவ் குறித்து அவரின் தாய் அளித்த கோரிக்கையைக் கூட பாகிஸ்தான் மறுத்துவிட்டது. அதற்கு பதில் அளிக்கவும் இல்லை.

16 முறை நிராகரிப்பு

வியன்னா ஒப்பந்தத்தின்படி, ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, சட்ட உதவிகளை நாட அனுமதி உண்டு. ஜாதவ் சட்ட உதவி வழங்குவது குறித்து 16 முறை இந்தியா கோரிக்கை விடுத்தும் அதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.

மனித உரிமை இல்லை

ஜாதவ் மீது என்ன குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது என்பதற்கான ஆவணங்களைக்கூட பாகிஸ்தான் வழங்கவில்லை. அவர் மீதான சட்டபூர்வ குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். மனித உரிமைகள் அடிப்படை அனைத்தும் காற்றில் பறக்கவிடுவது போல் பாகிஸ்தான் செயல்பட்டு விசாரணை செய்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.