ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மலிவு விலை ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களான 'ரோஸ்நெஃப்ட்' (Rosneft) மற்றும் 'லுகாயில்' (Lukoil) மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை இக்கட்டான நிலையில் தள்ளியுள்ளன.

ஒருதலைப்பட்சமான தடைகளை இந்தியா நீண்டகாலமாக எதிர்த்து வந்தாலும், நடைமுறையில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, இந்தியா பெரும்பாலும் அதற்கு இணங்கியே வந்துள்ளது. இதற்கு முன் ஈரான், மற்றும் வெனிசுலா உடனான எண்ணெய் வர்த்தகத்தில் இது நிகழ்ந்தது. தற்போது அதே சவால் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா விதித்த தடைகள்

இந்த விவகாரத்தில், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் மீது நேரடியாக விதிக்கப்படும் 'முதன்மைத் தடைகளை' (Primary Sanctions) விட, 'இரண்டாம் நிலைத் தடைகளே' (Secondary Sanctions) இந்தியாவுக்குப் பெரிய கவலையாக உருவெடுத்துள்ளன.

இந்த இரண்டாம் நிலைத் தடைகள், தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா போன்ற நாடுகளையும் தண்டிக்கின்றன. அமெரிக்கத் தடைகளை மீறி ரஷ்ய நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனமும், அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து (US Financial System) துண்டிக்கப்படும் அபாயம் இதில் உள்ளது.

சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளில் அமெரிக்காவின் பங்கு ஆகியவற்றால், எந்தவொரு பெரிய சர்வதேச நிறுவனமும் அமெரிக்க நிதி அமைப்பிலிருந்து விலக்கப்படுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய ஆபத்தாகும்.

ஏனெனில், கச்சா எண்ணெய் கொள்முதல் அனைத்தும் டாலரிலேயே நடைபெறுகின்றன. மேலும், சப்ளையர்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான பரிவர்த்தனைகள் அமெரிக்க வங்கி அமைப்பையே சார்ந்துள்ளன. இந்த அமைப்புடன் இணைக்கம் இல்லாவிட்டால், இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்திய நிறுவனங்களின் நிலை

இந்தியாவின் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) போன்ற தனியார் நிறுவனங்கள், அமெரிக்க நிதி அமைப்புடன் ஆழமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. அவை வெளிநாடுகளில் நிதி திரட்டுவது, அமெரிக்காவில் துணை நிறுவனங்களை நடத்துவது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கூட்டு வைத்திருப்பது எனப் பல வழிகளில் அமெரிக்காவைச் சார்ந்துள்ளன.

குறிப்பாக, இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட பாதியை ரிலையன்ஸ் நிறுவனமே மேற்கொள்கிறது. இந்நிறுவனம் அமெரிக்க பெருநிறுவனங்களுடன் குறிப்பிடத்தக்க முதலீடுகளையும் கூட்டணிகளையும் கொண்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறும் அபாயத்தை இந்திய நிறுவனங்கள் எடுக்க வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தடைகளே அவர்களை எச்சரிக்கையுடன் செயல்பட வைக்கும். வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும், தடைசெய்யப்பட்ட ரஷ்ய நிறுவனங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதியில் ஏற்படும் தாக்கம்

2025 ஆம் ஆண்டில் இதுவரை, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 35 சதவீதத்திற்கும் மேலாக ரஷ்ய கச்சா எண்ணெய் உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு, தற்போது தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகாயில் நிறுவனங்களிடமிருந்தே வருகிறது.

இந்த இரு நிறுவனங்களும் தடை செய்யப்பட்டிருப்பதால், இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கிடைக்கும் ரஷ்ய எண்ணெயின் அளவு கடுமையாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் குறுகிய காலத்தில் கணிசமாகக் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரஷ்ய எண்ணெய் மீது நேரடியாகத் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், அந்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பாதியைக் கொண்டுள்ள இந்த இரு நிறுவனங்கள் மீதான தடை, இந்தியாவின் இறக்குமதியைப் பாதிக்கும்.

தனது எரிசக்தி பாதுகாப்பிற்கும், அமெரிக்க நிதி அமைப்பை இழக்கும் அபாயத்திற்கும் இடையில் ஒரு சமநிலையக் கண்டறிய வேண்டிய சவாலில் இந்தியா உள்ளது. கொள்கை அளவில் இந்தியா ஒருதலைப்பட்சமான தடைகளை எதிர்த்தாலும், நடைமுறையில் இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்காவின் நிதி வலிமையே தீர்மானிக்கும் என்பது தெளிவாகிறது.