டிரம்ப் சொன்னதை செய்யும் மோடி! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைய வாய்ப்பு!
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைக்க திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த முடிவை மறுபரிசீலனை செய்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

இறக்குமதியைக் குறைக்கும் இந்தியா
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியைக் கூர்மையாகக் குறைக்க வாய்ப்புள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நிறுவனங்கள் மறுபரிசீலனை
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எண்ணெய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd), ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைக்க அல்லது முற்றிலும் நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்களும் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காகத் தங்கள் கொள்முதல் திட்டங்களை மறுமதிப்பீடு செய்து வருகின்றன.
ரஷ்யா மீதான தடைகள்
உக்ரைனில் நடந்து வரும் மோதல் காரணமாக ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லூகோயில் (Lukoil) உள்ளிட்ட முக்கிய ரஷ்ய எரிசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கூடுதல் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், பிரிட்டனும் இந்த இரண்டு நிறுவனங்கள் மீது தடைகளை விதித்தது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்ய இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதிக்குத் தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைப் பற்றி மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை கிட்டத்தட்ட 3% வரை உயர்ந்தது.
ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.94 டாலர், அதாவது 3.1% உயர்ந்தது. இதனால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலருக்கு மேல் சென்றது. அதேபோல், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 1.89 டாலர் அதிகரித்தது. 3.2% விலை உயர்வுடன் ஒரு பீப்பாய்க்கு 60.39 ஆக உயர்ந்தது.
சப்ளை செயின் பாதிப்பு குறித்த அச்சம்
கடுமையான தடைகள் மற்றும் ரஷ்யாவின் ஏற்றுமதி குறைவு காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.