அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஆசியச் சுற்றுப்பயணத்தை மலேசியாவில் தொடங்கியுள்ளார், அங்கு அவர் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ஆசியச் சுற்றுப்பயணத்தை மலேசியாவில் இருந்து உற்சாகமாகத் தொடங்கியுள்ளார். தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர், மலேசியாவின் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஆட்டம் போட்ட டிரம்ப்!
'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானம் தரையிறங்கியதும், டிரம்ப்புக்கு மலேசிய ராணுவ மரியாதை அளிக்கப்பட்டதுடன், அந்நாட்டின் போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்து வந்தன.
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் டிரம்ப்பை விமான ஓடுதளத்திலேயே வரவேற்றனர்.
அப்போது, பாரம்பரிய நடனக் கலைஞர்கள் 'ஹவாய் ஃபைவ்-ஓ' என்ற பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். சற்றும் எதிர்பாராதவிதமாக டிரம்ப் சிவப்பு கம்பளத்திற்கு அருகில் சென்று, அவர்களுடன் இணைந்து கைகளை அசைத்து நடன அசைவுகளை வெளிப்படுத்தினார்.
பரந்த புன்னகையுடன் காணப்பட்ட அவர், அங்கிருந்த மக்களிடம் இருந்து இரண்டு சிறிய கொடிகளை வாங்கி அசைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைப் பார்த்த பிரதமர் அன்வர் இப்ராஹிமும் மகிழ்ச்சியுடன் டிரம்ப்புடன் இணைந்துகொண்டது, பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தியது.
ஆசியான் உச்சி மாநாடு
இந்த கலகலப்பான தருணத்திற்குப் பிறகு, டிரம்ப், பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் ஆசியான் உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் ஆசியாவில் அமெரிக்காவின் ஈடுபாட்டை அதிகரிப்பது ஆகிய முக்கிய நோக்கங்களுடன் டிரம்ப் இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
"தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான நான் ஏற்படுத்திய சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் நாங்கள் உடனடியாக கையெழுத்திடுவோம்" என்று டிரம்ப் முன்னதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
முக்கிய சந்திப்புகள்
மலேசியாவில் நடக்கும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் டிரம்ப், மலேசியாவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் உள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவையும் அவர் சந்திக்க உள்ளார்.
மலேசியாவிற்கு முன் கத்தார் சென்ற டிரம்ப், காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பங்குபெற்ற வளைகுடா நாடுகளின் தலைவர்களை டிரம்ப் சந்தித்தார்.
மலேசியாவுக்குப் பிறகு, டிரம்ப் ஜப்பானில் புதிய பிரதமர் சனே டகாச்சியையும், பின்னர் தென் கொரியாவில் ஜி ஜின்பிங்கையும் சந்தித்து வர்த்தகப் போரைத் தீர்ப்பதற்கான உயர்-மட்டப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
