இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்...
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் தலாட் தீவுகளில் செவ்வாய்க்கிழமை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.18 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் முறையே அட்சரேகை: 4.75 மற்றும் தீர்க்கரேகை: 126.38 இல் காணப்பட்டது என்றும் 80 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் X வலைதள பக்கத்தில் " இந்தோனேசியாவின் தலாத் தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் நீளம்: 126.38, ஆழம்: 80 கிமீ.” என்று குறிப்பிடட்ப்பட்டுள்ளது.
தலாட் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், உள்ளூர் அரசாங்க நிறுவனம் சுனாமிக்கான எச்சரிக்கையை வெளியிடவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்துக்கள் சேதம் குறித்த எந்த அறிக்கையும் வரவில்லை என்றும் கூறியது.
கடந்த வாரம் வியாழக்கிழமை இந்தோனேசியாவின் பலாய் புங்குட்டில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை.
இந்தோனேஷியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால், உலகில் அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அதிக நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. 2020 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவில் 4.0 ரிக்டர் அளவு அல்லது அதற்கு அதிகமான அளவுடன்.1,600 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என்று அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம், புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது உயிர் மற்றும் உடைமைகளுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. சுமார் 8 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர், 200 க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.ஜப்பானின் மேற்குக் கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கம், உள்கட்டமைப்பை அழித்தது, ஹொகுரிகு பகுதியில் 23,000 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.