ஜெர்மனி வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் இனிமேல் ஏர்போர்ட் டிரான்சிட் விசா வைத்திருக்க தேவையில்லை என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ஜெர்மனி அதிபர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத்தின் அகமதாபாத்தில் நமது பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் ஜெர்மனி வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு தித்திப்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியர்கள் ஜெர்மனி வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது இனி விமான நிலைய போக்குவரத்து விசா (Airport Transit Visa) தேவையில்லை என்ற சூப்பரான அறிவிப்பை ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெளியிட்டுள்ளார்.

இனி ஏர்போர்ட் டிரான்சிட் விசா தேவையில்லை

இந்த அறிவிப்பு ஜெர்மன் வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியர்கள் அமெரிக்கா, கனடா அல்லது இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும்போது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் அல்லது மியூனிச் ஆகிய விமான நிலையங்கள் வழியாக செல்வது வழக்கம். இதுவரை இந்தியர்கள் ஜெர்மனி விமான நிலையங்களில் ஒரு முனையத்தில் இருந்து மற்றொரு முனையத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அல்லது அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஏர்போர்ட் டிரான்சிட் விசா வைத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்தியர்களுக்கு நிம்மதி

இப்போது ஜெர்மனி வழியாக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விமான நிலைய போக்குவரத்து விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்தியர்கள் ஜெர்மனி விமான நிலையங்களில் மற்ற வெளிநாட்டு விமான நிலையங்களை பிடிக்கும்போது தங்குவதற்கோ அல்லது வேறு ஒரு முனையத்துக்கு செல்வதற்கோ ஏர்போர்ட் டிரான்சிட் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை.

பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

இதன்மூலம் இனிமேல் இந்தியர்களுக்கு ஏர்போர்ட் டிரான்சிட் விசா எடுப்பதற்கான பணம் மிச்சமாகும். மேலும் ஏர்போர்ட் டிரான்சிட் விசா கிடைக்காதோ என்ற பயம் இனிமேல் இல்லை என்பதால் கடைசி நேரத்தில் புக் செய்து நெருக்கடியின்றி பயணிக்கலாம். ஜெர்மனி அதிபரின் இந்த சூப்பரான அறிவிப்புக்காக பிரதமர் மோடி அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு வலுப்பெறும்

''இந்திய குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை அறிவித்ததற்காக அதிபர் மெர்ஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு படி'' என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார்.