அமெரிக்க H-1B விசா நேர்காணல் தாமதத்தால் இந்தியாவில் சிக்கியுள்ள ஊழியர்கள், 2026 வரை இந்தியாவிலிருந்தே ரிமோட் முறையில் பணிபுரிய அமேசான் அனுமதித்துள்ளது. இருப்பினும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தற்காலிக தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் தனது ஊழியர்களுக்கு அமேசான் (Amazon) நிறுவனம் தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
விசா நேர்காணல் தள்ளிப்போனதால் அமெரிக்கா திரும்ப முடியாமல் தவிக்கும் ஊழியர்கள், இந்தியாவிலிருந்தே பணிபுரிய அந்நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
அமேசானின் அதிரடித் தளர்வு
வாரத்தில் 5 நாட்களும் அலுவலகம் வந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கடுமையான விதியை அமேசான் சமீபத்தில் அமல்படுத்தியது. ஆனால், விசா சிக்கலால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அமெரிக்கா திரும்ப முடியாமல் இந்தியாவில் முடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த விதியில் விதிவிலக்காக ஒரு தளர்வை அமேசான் அறிவித்துள்ளது.
டிசம்பர் 13-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் இருந்துகொண்டு, H-1B அல்லது H4 விசா நேர்காணலுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு இது பொருந்தும். தகுதியுள்ள ஊழியர்கள் 2026 மார்ச் 2-ம் தேதி வரை இந்தியாவிலிருந்து 'ரிமோட்' (Remote) முறையில் வேலை செய்யலாம்.
கடுமையான கட்டுப்பாடுகள்
இந்த அனுமதி வழங்கப்பட்டாலும், ஊழியர்கள் வழக்கமான அனைத்துப் பணிகளையும் செய்ய முடியாது. உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமேசான் சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோடிங் செய்யத் தடை: சாப்ட்வேர் டெவலப்பர்கள் கோடிங் (Coding), டெஸ்டிங் அல்லது பிழைதிருத்தம் (Troubleshooting) போன்ற பணிகளைச் செய்ய முடியாது.
அதிகார வரம்பு: முக்கிய முடிவுகளை எடுத்தல், தயாரிப்புகளை நிர்வகித்தல், வாடிக்கையாளர்களுடன் பேசுதல் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
அலுவலகம் செல்லக் கூடாது: இந்தியாவிலுள்ள அமேசான் அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது அங்கிருந்து வேலை செய்யவோ அனுமதி கிடையாது. அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்தே பணிபுரிய வேண்டும்.
ஏன் இந்த விசா நெருக்கடி?
அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட புதிய விசா விதிமுறைகளே இந்தத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
விசா விண்ணப்பதாரர்களின் கடந்த 5 ஆண்டு கால சமூக வலைதள (Social Media) பதிவுகளை ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் விசா நேர்காணல்கள் பல மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை தள்ளிப்போயுள்ளன. 2025 டிசம்பரில் நடக்க வேண்டிய நேர்காணல்கள் 2026-ன் இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
பெரிய அளவில் பாதிப்பு
H-1B விசா திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களில் அமேசான் முதன்மையானது. 2024 நிதியாண்டில் மட்டும் சுமார் 14,783 விசா விண்ணப்பங்களை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.
அமேசான் தவிர கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களும் விசா சிக்கல் காரணமாகத் தங்கள் ஊழியர்களைப் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.

