இந்தியாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு, சீனா பாகிஸ்தானுக்கு ஜூன் மாத இறுதிக்குள் 3.7 பில்லியன் டாலர் வணிகக் கடனை வழங்கவுள்ளது.
இந்தியாவுடன் மோதலில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு சீனா மீண்டும் கைகொடுக்கிறது. இந்தியாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு, சீனா பாகிஸ்தானுக்கு பெரும் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.
அறிக்கைகளின்படி, சீனா ஜூன் மாத இறுதிக்குள் பாகிஸ்தானுக்கு 3.7 பில்லியன் டாலர் (ரூ.31,584 கோடி) வணிகக் கடனை வழங்கவுள்ளது. இந்தக் கடன் முழுவதும் சீன யுவானில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. டாலரின் ஆதிக்கத்தை சவால் செய்யும் நோக்கில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் (ரூ.8500 கோடி) கடனைப் பெற்றது.
சீனா கொடுக்கப்போகும் கடன்
இதனால், பாகிஸ்தானின் மத்திய வங்கியின் கையிருப்பு 11.4 பில்லியன் டாலராக உயர்ந்தது. தற்போது சீனாவின் கடனால் இது மேலும் அதிகரிக்கும். சீனா கடன் வழங்கவில்லை என்றால், ஜூன் மாத இறுதியில் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 10 பில்லியன் டாலருக்கும் கீழே குறைந்திருக்கும். 2025-26 நிதியாண்டில் தனது அந்நியச் செலாவணி கையிருப்பை 14 பில்லியன் டாலராக பராமரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
பாகிஸ்தானின் மொத்தக் கடன்
ஜூன் 2024 நிலவரப்படி, பாகிஸ்தானின் மொத்தக் கடன் 256 பில்லியன் டாலர் (ரூ.21.6 லட்சம் கோடி). இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 67% ஆகும். பாகிஸ்தானுக்கு ரூ.7.3 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடனும், ரூ.14.3 லட்சம் கோடி உள்நாட்டுக் கடனும் உள்ளது. டிசம்பர் 2024 வரை, சீனாவுக்கு பாகிஸ்தான் 28.7 பில்லியன் டாலர் (ரூ.2.42 லட்சம் கோடி) கடன்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 3.7 பில்லியன் டாலர் கடன் கிடைத்த பிறகு, இந்தத் தொகை 32.4 பில்லியன் டாலராக உயரும். கூடுதலாக, டிசம்பர் 2024 வரை சவுதி அரேபியா பாக்கிஸ்தானுக்கு 9.16 பில்லியன் டாலர் (ரூ.77.2 ஆயிரம் கோடி) கடன் வழங்கியுள்ளது.


