கேரளாவில் சரக்கு கப்பலில் தீப்பிடித்த நிலையில், துரித மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய கடற்படைக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மும்பைக்கு 12.5 மீட்டர் இழுவையுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் WAN HAI 503புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் பணியாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். இவர்களில் 14 பேர் சீனர்கள். 6 பேர் தைவானை சேர்ந்தவர்கள். நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் பேப்பூர்-அழிகல் கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சரக்கு கப்பலில் தீப்பிடித்தது.
சரக்கு கப்பலில் தீ விபத்து
கப்பலில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று கடலில் குதித்த 18 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். அவர்களில் 4 பேர் காயம் அடைந்தனர்.
மேலும் கப்பலின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மேலும் நான்கு பணியாளர்களை காணவில்லை. அவர்களும் மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2வது நாளாக கப்பலில் எரியும் தீ
கப்பலில் தீ விபத்து ஏற்பட்டவுடன் கொச்சி மற்றும் மங்களூரிலிருந்து வரும் டோர்னியர் விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை மற்றும் கடற்படையின் கப்பல்கள் அங்கு சென்றன. இன்று தொடர்ந்து 2வது நாளாக சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், கடலோர காவல் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கப்பலில் எரியக்கூடிய திரவங்கள் மற்றும் திடப்பொருட்கள், நச்சுப் பொருட்கள் உள்ளதால் தீயை அணைப்பதில் சிரமம் நிலவி வருகிறது.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சீனா
இந்நிலையில், சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டவுடன் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்ட இந்திய கடற்படைக்கு சீனா நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஜூன் 9 அன்று, MV Wan Hai 503 கேரளாவின் ஆழிக்கலில் இருந்து 44 கடல் மைல் தொலைவில் சென்றபோது தீ விபத்துக்குள்ளானது.
மொத்தமாக இருந்த 22 பணியாளர்களில், தைவானைச் சேர்ந்த 6 பேர் உட்பட 14 பேர் சீனர்கள். இந்திய கடற்படை மற்றும் மும்பை கடலோர காவல்படையின் உடனடி மற்றும் தொழில்முறை மீட்புக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தேடல் நடவடிக்கைகள் வெற்றிபெறவும், காயமடைந்த பணியாளர்கள் விரைவாக குணமடையவும் நாங்கள் விரும்புகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.