கேரளாவில் நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த ஊழியர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படை ஈடுபட்டு வருகிறது.

Singapore Cargo Ship Catches Fire In Kerala: இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மும்பைக்கு 12.5 மீட்டர் இழுவையுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் WAN HAI 503புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் பணியாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் இருந்தனர். கேரளாவின் பேப்பூர்-அழிகல் கடற்கரையிலிருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மர்ம பொருள் வெடித்து சரக்கு கப்பலில் தீப்பிடித்தது.

நடுக்கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல்

இதனால் கப்பலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கடலில் குதித்தனர். இந்த சம்பவம் குறித்து மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து கொச்சி கடல்சார் செயல்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து சென்று கடலில் குதித்த 18 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர். அவர்களில் 4 பேர் காயம் அடைந்தாக கூறப்படுகிறது.

4 பேரை தேடும் பணி தீவிரம்

மேலும் கப்பலின் தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மேலும் நான்கு பணியாளர்களை காணவில்லை. அவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொச்சி மற்றும் மங்களூரிலிருந்து வரும் டோர்னியர் விமானங்கள் மற்றும் கடலோர காவல்படை மற்றும் கடற்படையின் கப்பல்கள் தீப்பிடித்து எரியும் கப்பலை அடைந்துள்ளன.

சரக்கு கப்பலில் ஆபத்தான பொருட்கள்

சரக்கு கப்பலின் சில கொள்கலன்கள் ஆபத்தான சரக்குகளை ஏற்றிச் செல்கின்றன. அவற்றில் எரியக்கூடிய திரவங்கள் மற்றும் திடப்பொருட்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் அடங்கும் என்று பேப்பூரில் உள்ள துறைமுக அதிகாரி கேப்டன் கே.அருண் குமார் தெரிவித்தார். காப்பாற்றப்பட்ட குழுவினர் பேப்பூருக்கு கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது. இந்த குழுவினரில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள கடல் பகுதியில் 2வது விபத்து

தீ விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல் 10ம் தேதி (நாளை) மும்பை சென்றடைய இருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த ராசாயனம் வெடித்து தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் கேரள கடல் பகுதியில் நிகழும் 2வது கப்பல் விபத்து இதுவாகும். சில வாரங்களுக்கு முன்பு விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து ஏராளமான கன்டெய்னர்களை ஏற்றிச்சென்ற சரக்கு கப்பல் மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்ட நிலையில், அதில் இருந்த கன்டெய்னர்கள் கேரளாவின் கொல்லம், ஆழப்புழா கடற்கரையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.