கடலில் மூழ்கிய கப்பல்: அடுத்தடுத்து கரை ஒதுங்கும் கன்டெய்னர்கள்.! பெரும் வெடிப்பு அபாயம்
கேரளாவில் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்குச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியதில் கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. இந்த கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் ஒதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. திடீரென கப்பலானது கடலில் மூழ்க தொடங்கியது. சில மணி நேரங்களில் கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. விபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
இதனையடுத்து கப்பலில் இருந்த 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது. அதே நேரம் கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்னர்களை மிதக்க தொடங்கியது. எனவே அந்த கண்டெய்னர்கள் கேரளாவில் உள்ள பல்வேறு கடற்கரை ஓரங்களை வந்தடையும் என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து கன்டெய்னர்கள் கரை ஒதுங்கியுள்ளது. கொல்லம் கருநாகப்பள்ளி அருகே கடற்கரையில் இது நிகழ்ந்துள்ளது. கடல் கரையில் மோதி நிற்கும் நிலையில் கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் கொள்கலன் கரை ஒதுங்கியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் உறவினர் வீடுகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காலியான கொள்கலன்தான் கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக ஆய்வு நடத்த முடியாத நிலை நீடிக்கிறது. மூழ்கிய கப்பலில் இருந்து வந்ததாகத் தோன்றும் எந்தப் பொருளையும் கடற்கரையில் கண்டால், தயவுசெய்து அதைத் தொடவோ அல்லது அருகில் செல்லவோ வேண்டாம்.
உடனடியாக 112 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கவும். குறைந்தபட்சம் 200 மீட்டர் தூரம் விலகி இருக்கவும். கூட்டமாக நிற்க வேண்டாம். அதிகாரிகள் பொருட்களை அகற்றும்போது இடையூறு செய்ய வேண்டாம். தூரத்தில் இருந்து கவனிக்கவும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து கடலில் பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்கிறது. கொச்சி கடற்கரையிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் 640 கண்டெய்னர்களுடன் வந்த சரக்குக் கப்பல் மூழ்கியது.
கடலோரக் காவல்படையின் இரண்டு கப்பல்களும் டோர்னியர் விமானங்களும் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. மூழ்கிய கப்பலில் உள்ள 250 டன் கால்சியம் கார்பைடு நிரப்பப்பட்ட கண்டெய்னர்கள் பெரும் அபாயத்தை விளைவிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கரை ஒதுங்கிய கொள்கலனைப் பற்றி உள்ளூர் மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை கொல்லம் மாவட்ட ஆட்சியர் தேவிதாஸ் உட்பட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொள்கலனின் ஒரு பக்கம் திறந்த நிலையில் இருந்தது. கண்டெய்னர்களில் தண்ணீர் புகுந்தால் கால்சியம் கார்பைடுடன் சேர்ந்து அசிட்டிலீன் வாயு உருவாகி பெரும் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே பல்வேறு முகமைகள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
இதற்கிடையில், கப்பலில் இருந்து கடலில் விழுந்த ஒரு கண்டெய்னர் கொல்லம் கருநாகப்பள்ளி சிறியீழிகல் கடற்கரையில் ஒதுங்கியது. நள்ளிரவில் கண்டெய்னர் பெரும் சத்தத்துடன் கரை ஒதுங்கியது. கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். காலியான கண்டெய்னர் தான் கரை ஒதுங்கியதாகக் கருதப்படுகிறது.