ஜெர்மனியைச் சேர்ந்த 66 வயதுப் பெண்மணி அலெக்சாண்ட்ரா ஹில்டபிராண்ட், தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையே இதற்குக் காரணம் என்கிறார். ஆனால் மருத்துவர்கள் இந்த வயதில் கர்ப்பம் தரிப்பது ஆபத்தானது என்கிறார்கள்.

ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா ஹில்டபிராண்ட் (Alexandra Hildebrandt) என்ற 66 வயதுப் பெண்மணி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்ததன் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த வயதில் கர்ப்பம் தரிப்பது பற்றி மற்றவர்கள் எழுப்பும் கேள்விகளைத் தான் கண்டுகொள்வதில்லை எனவும் அவர் உறுதியாகக் கூறுகிறார்.

இவரது இளைய மகன், பிலிப் (Philipp), கடந்த மார்ச் 19ஆம் தேதி பெர்லினில் உள்ள சாரிட்டி மருத்துவமனையில் (Charité Hospital) சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார்.

ஆரோக்கியத்தின் ரகசியம்

ஹில்டபிராண்ட், தனது 53 வயதுக்குப் பிறகு பெற்றெடுத்த எட்டாவது குழந்தை பிலிப். பெரிய குடும்பம் இருப்பது அற்புதமான விஷயம் மட்டுமல்ல, குழந்தைகளைச் சரியாக வளர்ப்பதற்கு அது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.

மனித உரிமை ஆர்வலரான ஹில்டபிராண்ட், தனது 60களிலும் கர்ப்பத்தைத் தாங்கும் அளவுக்கு ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பதற்கு தனது வாழ்க்கை முறையே காரணம் என்று நம்புகிறார். "நான் மிகவும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன், தினமும் ஒரு மணிநேரம் தவறாமல் நீச்சல் அடிக்கிறேன், இரண்டு மணி நேரம் நடக்கிறேன்," என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தான் எப்போதும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியதில்லை என்றும், புகைப்பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ இல்லை என்றும் சொல்கிறார்.

பிலிப்பின் மூத்த சகோதரி ஸ்வெட்லானாவுக்கு (Svetlana) தற்போது 46 வயதாகிறது. 10 குழந்தைகளில் எலிசபெத், மாக்சிமிலியன் என்ற இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர். அவர்களுக்கு இப்போது 12 வயது.

இவரது மகப்பேறு மருத்துவர் டாக்டர் உல்ஃப்காங் ஹென்ரிச் (Dr Wolfgang Henrich), ஹில்டபிராண்டின் கர்ப்பம் "பெரும்பாலும் சிக்கலற்றதாக" இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கருத்து என்ன?

இந்த நிகழ்வு குறித்து இந்திய மகப்பேறு மருத்துவர் டாக்டர் கானா ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "உடல் தகுதியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குக் காரணம். இருந்தாலும், கர்ப்பகால அபாயத்தில் வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. 60களில் இயற்கையாகக் கருத்தரிப்பது மிகவும் அரிது. அப்படி கரு உருவானாலும் அந்த கர்ப்பம் அதிக ஆபத்துடையதாகவே கருதப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ப்ரீக்ளாம்ப்சியா, நஞ்சுக்கொடி சிக்கல்கள் மற்றும் முந்தைய பிரசவங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஆபத்தை அதிகரிக்கின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார். சிசேரியன் பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன என்று மருத்துவர் கூறுகிறார்.