இந்தியாவின் தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதும், இவர்களின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதும் இப்போது தெரியவந்துள்ளது.
5 Key Terrorists Killed In Indian Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ம் தேதி இரவு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கியது. நமது ராணுவ வீரர்கள் 9 இடங்களில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தனர்.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்'
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் நமது ராணுவத்தை பாராட்டி இருந்தனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு நமது ராணுவம் பயங்கரவாத முகாம்களை அழித்தபோது அதில் 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.
5 முக்கிய பயங்கரவாதிகள் கொலை
அதாவது இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி அபு ஜிண்டால் கொல்லப்பட்டுள்ளான். இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளின் விவரங்கள்:
1. லஷ்கர் இ தொய்பாவின் தளபதி அபு ஜுண்டால். இவனது இறுதிச் சடங்கு பிரார்த்தனை பாகிஸ்தானில் அரசுப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு JuD இன் ஹபீஸ் அப்துல் ரவூஃப் (ஒரு உலகளாவிய பயங்கரவாதி) தலைமை தாங்கினான். பாகிஸ்தான் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலும் பஞ்சாப் காவல்துறையின் IG-யும் பிரார்த்தனை விழாவில் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயங்கரவாதத்தின் முக்கிய தளபதி அபு ஜுண்டால் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2. ஹபீஸ் முகமது ஜமீல். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன். இவன் பயங்கரவாதி மௌலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர்.
பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்
3. முகமது யூசுப் அசார். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன். இவனும் மௌலானா மசூத் அசாரின் மைத்துனர். இவன் இந்தியாவில் IC-814 விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.
4. காலித் என்ற அபு ஆகாஷா. லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவன். ஜம்மு & காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட அவன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டான். இவனது இறுதிச் சடங்கு பைசலாபாத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை ஆணையர் கலந்து கொண்டனர்.
பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைத்தவன் பலி
5. முகமது ஹசன் கான். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடையவன். இவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) ஜெ.எம். இயக்கத்தின் செயல்பாட்டுத் தளபதியான முஃப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன். ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் இவன் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


