Asianet News TamilAsianet News Tamil

கரும்புக்காக லாரி ஓட்டுனரை சுத்தி சுத்தி விரட்டிய யானை.. போக்குக்காட்டி தப்பித்த சாதுர்யம் - வைரல் வீடியோ!

Sathyamangalam : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் கரும்பு லாரியை வழிமறித்து, ஓட்டுநர்களை துரத்திய யானையால் சிறுது நேரம் சலசலப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கோடைகாலம் நெருங்குவதால் வனப்பகுதி முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், உணவு-தண்ணீர் தேடி யானைகள் சாலையில் உலா வருவதும், வாகனங்களை துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், இன்று மாலை தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது, அந்த லாரி பண்ணாரி அருகே சென்ற போது பழுதாகி சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. 

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று, பழுதாகி நின்ற லாரியின் அருகே வந்து கரும்பை துதிக்கையால் சுவைத்து சாப்பிட்டது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்று கொண்டு கரும்பை சுவைத்தது. 

திடீரென அந்த ஒற்றை யானை பழுதாகி நின்ற லாரி ஓட்டுனர்களை துரத்தியது. இதில் லாரி ஓட்டுநர்கள், லாரியை சுற்றி சுற்றி வந்து யானைக்கு போக்கு காட்டி உயிர் தப்பினர். இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் 15 நிமிடத்திக்கு மேலாக யானை நடுரோட்டில்  நின்றதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு  யானை  மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து வனப்பகுதியில் சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

Video Top Stories