தேர்தல் 2024.. அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் - செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ரஞ்சித்!
Actor Ranjith : கோவை காந்திபுரம் பகுதியில் சாய் பிரசாத் எனும் புதிய ஸ்டுடியோ திறப்பு விழாவில் பங்கேற்ற செய்தியாளர்களை சந்தித்தார் பிரபல நடிகர் ரஞ்சித் அவர்கள்.
நாகரீகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம், எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலை தான். மானம், மரியாதை என்பது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சரி, பூவிற்கும் ஒரு பெண் என்றாலும் அது அனைவர்க்கும் உண்டு. வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத் தக்க விஷயம் என்றும் பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருப்பதாகவும் நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை என்றும் ரஞ்சித் கூறினார்.
மனதை காயப்படுத்தும்படி அவர் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். இது போன்ற பேச்சு அரசியல் மீது ஒரு அருவருக்கத்தக்க எண்ணத்தை கொண்டு வருகிறது என்றும், அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும், இந்த மாதிரி அரசியல் என்றாலே சாக்கடை, குடித்துவிட்டு இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை வளர்கிறது என்றும் அவர் கூறினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த வாய்ப்பு கிடைத்தால் தான் அண்ணாமலை யார் என்பதை நிரூபிக்க முடியும் என்றும் கூறினார் ரஞ்சித். அவர் ஒரு திறமையான ஐபிஎஸ் அதிகாரி எந்த விஷயத்திலும் துணிச்சலாக செயல்படக் கூடியவர் என்றும் அப்படிப்பட்ட ஒரு அதிகாரி பதவியை துறந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால் அது ஒரு சிறந்த அடிப்படை தான் என்றும் மேற்கோள்காட்டினார்.
அதிமுகவை பொருத்தவரை தன் வினை தன்னைச் சுடும் என்பது போல், நாம் என்ன செய்கிறோமோ அது நம்மை அறுக்கும் என்றும், இது பாஜக, திமுக, அதிமுக அனைத்துக்குமே பொதுவான ஒன்று. நாம் என்ன செய்தோமோ அதுதான் விளையும், இந்தத் தேர்தலில் ஒவ்வொருவருமே கபடி கபடி என்று தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முயல்வார்கள் என்றும் கூறினார்.
பாமக தலைவர் அன்புமணியை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வெளிநாடுகளிலும் பெயர் பெற்றவர், திறம்பட நிர்வாகம் செய்தவர், மதுவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் எதிராக இருப்பவர், சமூக சிந்தனையுள்ள அறிவான தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார்.