கவுதம் மேனன் இயக்கத்தில் ‘கியூன்’என்ற பெயரில் மிக விரைவில் வெப் சீரிஸாக வெளியாகவிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தெலுங்குப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சி ‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்’என்று கமெண்ட் அடித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் பல்வேறு இயக்குநர்களால்  மேற்கொள்ளப்பட்டு அவை அரைகுறையாக நிற்கும் நிலையில் கவுதம் மேனன் மிகவும் பரபரப்பாக அக்கதையை எடுத்து முடித்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஜெயலலிதாவின் படத்துக்கு ’குயின்’ என்று பெயர் சூட்டியிருக்கும் கவுதம் மேனன் அவரது  குழந்தைப் பருவம், இளமை பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல் அமைச்சராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார்.இதில் ஜெயலலிதாவாக இதில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார்.

இக்கதையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பாத்திரத்தை கவுதம் சர்ச்சைகள் காரணமாக தவிர்த்துவிட்டார் என்று செய்திகள் வந்த நிலையில் ‘குயின்’ வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரும் பிரபல தெலுங்குப்பட இயக்குநருமான வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘‘ஒரு ராணி இன்னொரு ராணி வேடத்தில் நடித்துள்ளார்’என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.