இந்தப் படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த அவர், இயக்குநர் கண்ணன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனிடையே, இயக்குநர் சினிஷ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் சந்தானம் கமிட்டாகியுள்ளார். 

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்துக்கு 'டிக்கிலோனா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'ஜென்டில்மேன்' படத்தில் கவுண்டமணி - செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான 'டிக்கிலோனா' என்ற சொல்லையே படத்தின் தலைப்பாக்கி கவனம் ஈர்த்துள்ளனர். இந்தப் படத்தில், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயருமான ஹர்பஜன் சிங் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 

கிரிக்கெட்டிலிருந்து வெள்ளித்திரைக்கு ஹர்பஜன் சிங் அடியெடுத்து வைக்கும் முதல் படம் இது.இந்தப் படத்தில், அனகா, ஷிரின், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், ராஜேந்திரன், சித்ரா லக்ஷ்மணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அத்துடன், டிக்கிலோனா ஆடவுள்ள நடிகர், நடிகையர் கேங்கின் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளது. 

மேலும், டிக்கிலோனா படத்தின் ஷூட்டிங், வரும் நவம்பர் 18ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும்  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல்முறையாக சந்தானம் 3 வேடங்களில் நடிக்கும் 'டிக்கிலோனா' படத்திற்கு, யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களுடன் சந்தானம் - யுவன்சங்கர்ராஜா கூட்டணி சேர்ந்து விளையாடவிருக்கும் 'டிக்கிலோனா' படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.