மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.
Kannppa Movie Official Trailer
இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு புராண மற்றும் சரித்திர திரைப்படமாக ‘கண்ணப்பா’ திரைப்படம் உருவாகியுள்ளது. சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்ப நாயக்கனாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ‘மகாபாரதம்’ போன்ற தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஃபேண்டஸி டிராமா ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கண்ணப்ப நாயனாரின் தியாகம்
‘கண்ணப்பா’ திரைப்படம் 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றியதாகும். கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் திண்ணா. ஒரு வேட்டைக்காரனாக இருந்து பின்னர் சிவபெருமானின் அதி தீவிர பக்தராக மாறிய அவரது பக்தியையும், சிவபெருமானுக்காக அவர் செய்ய துணிந்த தியாகத்தையும் இந்த படம் சித்தரிக்கிறது. சிவலிங்கத்தின் கண்களில் இருந்து ரத்தம் வடிவதைக் கண்ட கண்ணப்ப நாயனார் ஒரு கண்ணை பிடுங்கி லிங்கத்தின் மீது வைத்ததாகவும், இரண்டாவது கண்ணிலும் ரத்தம் வடிவதை கண்ட அவர் இரண்டாவது கண்ணையும் பிடுங்க முற்படும்பொழுது சிவபெருமானை தோன்றி அவரை தடுத்தாட்கொண்டதாகவும் சைவ சமய நூல்கள் கூறுகின்றன. இந்த நிகரற்ற பக்தி மற்றும் தியாகத்தின் மையக்கருவாகவே இந்த படம் உருவாகி உள்ளது.
‘கண்ணப்பா’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள்
இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு கண்ணப்ப நாயனராகவும், நடிகர் பிரபாஸ் ருத்ரா என்னும் வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். மோகன்லால் கிராதகா என்கிற கதாபாத்திரத்திலும், அக்ஷய் குமார் சிவபெருமானாகவும், காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும் நடித்துள்ளனர், சரத்குமார் நாதநாதூடு கதாபாத்திரத்திலும், மதுபாலா பன்னகா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும் பிரம்மானந்தம், முகேஷ் ரிஷி, பிரபுதேவா, ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் தந்தை மோகன்பாபுவுக்கு சொந்தமான ‘24 பிரேம் ஃபேக்டரி’ மற்றும் ‘ஏவிஏ என்டர்டைன்மென்ட்’ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ படம்
படத்திற்கு ஸ்டீபன் தேவசி மற்றும் மணி சர்மா ஆகியோர் இசையமைத்துள்ளனர். 2023 இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியது. தணிகல்ல பரணி என்பவர் ‘பக்த கண்ணப்பா’ என்கிற பெயரில் இந்த கதையை வைத்திருந்தார். பின்னர் அதை விஷ்ணு மஞ்சுவுக்கு விற்றார். தற்போது இந்த படம் ரூ.100 முதல் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் VFX பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான காட்சிகளுடன் இந்த படம் உருவாகி உள்ளது.
வரவேற்பை பெரும் ‘கண்ணப்பா’ டிரெய்லர்
இந்தப் படத்தின் VFX காட்சிகள் கொண்ட ஒரு ஹார்ட் டிரைவ் திருடப்பட்டதாகவும், அதனால் படத்திற்கு சுமார் ரூ.15 முதல் ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டு தயாராக உள்ளது. வருகிற ஜூன் 27ஆம் தேதி 5 மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. பக்தி, காவியம், தியாகம், நம்பிக்கையின் மகத்துவத்தை போற்றும் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

