விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த ‘பொன்னி’ சீரியல் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
நிறைவடைந்த ‘பொன்னி’ சீரியல்
2023 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் ‘பொன்னி’. இந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் சபரிநாதனும், கதாநாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வந்தனர். சில நாட்களாகவே சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் 663 எபிசோடுகளுடன் நிறைவடைந்துள்ளது.
‘பொன்னி’ சீரியலின் கதை என்ன?
பொன்னி அவளுடைய நோய்வாய் பட்டிருக்கும் தந்தையை தனி ஆளாக கவனித்து வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரது அப்பா கடன் பட்ட நபரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அந்த சமயம் அவருக்கு கதாநாயகனுடன் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பின்னர் அவர் அந்த வீட்டில் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். அதிலிருந்து பொன்னி எப்படி மீண்டு வந்தார்? அந்த குடும்பத்தில் ஒருவராக மாறினாரா? சவால்களை சமாளித்து பொன்னி எப்படி கணவர் குடும்பத்துடன் இணைகிறார்? என்பதுதான் இந்த சீரியலின் கதை.
கனா ப்ரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தத் தொடருக்கான கதையை பிரியா தம்பி எழுத, நீரவி பாண்டியன் இயக்கி வந்தார். கனா தயாரிப்பு நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தது. இந்த நிலையில் கனா நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 663 எபிசோடுகளுடன் ‘பொன்னி’ தொடர் இனிதே நிறைவுற்றதாக அறிவித்துள்ளது. “இந்த நற்பயணத்தில் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கைகோர்த்து நின்ற ஒவ்வொருவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மீண்டும் ஒரு வெற்றித் தொடரில் உங்களை மகிழ்விக்க காத்திருக்கிறோம். எங்கள் கனவிற்கு துணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளனர்.
புதிய தொடருக்கான அறிவிப்பு
‘பொன்னி’ தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்குப் பதிலாக புதிய தொடரான ‘தென்றலே மெல்ல பேசு’ ஜூன் 9 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.