Neal Mohan யூடியூப் சிஇஓ நீல் மோகனுக்கு டைம் இதழின் 2025ம் ஆண்டின் சிறந்த சிஇஓ விருது! அவரது லக்னோ கனெக்ஷன் மற்றும் வெற்றிப் பயணம் பற்றிய முழு விவரம் உள்ளே.
யூடியூப் (YouTube) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன், டைம் (TIME) இதழின் "2025-ம் ஆண்டின் சிறந்த சிஇஓ" (CEO of the Year) ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூகுளின் அல்பபெட் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இவருக்கு, இந்த கௌரவம் கிடைத்துள்ளது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
டைம் இதழ் புகழாரம்: "கலாச்சார விவசாயி"
நீல் மோகனைப் பற்றி டைம் இதழ் குறிப்பிடுகையில், "உலகம் உட்கொள்ளும் கலாச்சார உணவை யூடியூப் தான் சமைக்கிறது. அதில் நீல் மோகன் ஒரு விவசாயி போல செயல்படுகிறார்; அவர் எதை விளைவிக்கிறாரோ, அதைத்தான் நாம் உண்கிறோம்," என்று புகழாரம் சூட்டியுள்ளது. யூடியூப் தளம் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதைக் கையாள்வதில் மோகனின் பங்கையும் இந்த வரிகள் அழகாக விவரிக்கின்றன.
அமைதியான ஆளுமை: பதற்றமில்லாத தலைவர்
உலகின் மிகச் சக்திவாய்ந்த வீடியோ தளத்தை வழிநடத்தினாலும், நீல் மோகன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். அவரைப் பற்றி டைம் இதழ் கூறுகையில், "அவர் அதிகம் பேசாதவர், நிதானமானவர், எளிதில் உணர்ச்சிவசப்படாதவர். தனது மகள்களின் நடன நிகழ்ச்சிகளை ரசிப்பது, விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பது என எளிமையான வாழ்க்கையை விரும்புகிறார்," என்று குறிப்பிட்டுள்ளது. யூடியூப் வீடியோக்களில் நடிக்கக் கேட்டால் கூட, அவர் மறுக்காமல் நடிப்பார் என்றும் அந்த இதழ் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளது.
லக்னோ உடனான நெருங்கிய தொடர்பு
நீல் மோகன் அமெரிக்காவின் இண்டியானாவில் பிறந்திருந்தாலும், அவரது வேர்கள் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைந்துள்ளன. 1985-ம் ஆண்டு, தனது 12-வது வயதில் அவர் பெற்றோருடன் இந்தியாவின் லக்னோவிற்கு (Lucknow) குடிபெயர்ந்தார். அங்குள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் படித்த அவர், இந்தியக் கலாச்சாரத்துடன் வளர்ந்தார். சமஸ்கிருதம் (Sanskrit) மொழியைக் கற்றுக்கொண்ட அவர், அதை "கம்ப்யூட்டர் புரோகிராமிங் போல விதிகள் நிறைந்தது" என்று ஒப்பிட்டுள்ளார். 1992-ல் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.
பொறியாளர் டூ சிஇஓ: ஒரு வெற்றிப் பயணம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ முடித்த நீல் மோகன், தனது பணியை ஆக்சென்ச்சரில் தொடங்கினார். பின்னர் கூகுளில் (Google) இணைந்து டிஸ்ப்ளே மற்றும் வீடியோ விளம்பரப் பிரிவின் மூத்த துணைத் தலைவராக உயர்ந்தார். 2015-ல் யூடியூப்பின் தலைமைத் தயாரிப்பு அதிகாரியாக (Chief Product Officer) பொறுப்பேற்ற அவர், 2023-ல் சூசன் வோஜிக்கிக்கு (Susan Wojcicki) பிறகு சிஇஓ-வாகப் பதவியேற்றார். தற்போது சான் பிரான்சிஸ்கோவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


