டுவிட்டரை அடுத்து வாட்ஸ்அப்பிலும் பரிதாப நிலை! WhatsApp India தலைவர்கள் பதவி விலகல்!
இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் மெட்டா இந்தியாவின் பொது கொள்கை இயக்குனர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
டுவிட்டரில் பணியாளர்கள் பணி நீக்கம், தலைவர்கள் மாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேஸ்புக் மெட்டா நிறுவனத்திலும் கிட்டத்தட்ட 11 ஆயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில், தற்போது வாட்ஸ்அப் இந்தியா நிறுவனத்திலுள்ள இரண்டு முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
வாட்ஸ்அப்பின் இந்தியத் தலைவர் இருந்தவர் அபிஜித் போஸ். இதே போல் மெட்டா இந்தியா பொதுக் கொள்கை இயக்குநராக இருந்தவர் ராஜீவ் அகர்வால். இவர்கள் இருவரும் தற்போது தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் இந்தியாவில் பொதுக் கொள்கையின் இயக்குநராக இருந்த ஷிவ்நாத் துக்ரால், இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மெட்டா பிராண்டுகளுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் 11,000 பணியாளர்களை நீக்கம் செய்த ஒரே வாரத்தில் தற்போது இந்திய தலைவர்கள் மாறியுள்ளனர்.
Twitter நிறுவனத்தில் 4 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தாரா எலான் மஸ்க்?
இதுதொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைவர் வில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இந்தியாவில் எங்கள் முதல் வாட்ஸ்அப் தலைவராக அபிஜித் போஸ் அளித்த மகத்தான பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது சீரிய பணியால், எங்கள் குழுவினரால் மில்லியன் கணக்கான மக்கள் மற்றும் வணிகங்களுக்குப் பயனளிக்கும் புதிய சேவைகளை வழங்க முடிந்தது.
இந்தியாவிற்கு வாட்ஸ்அப் இன்னும் பலவற்றைச் செய்ய முடியும், மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனத்தில் அபிஜித் வகித்து இருந்த பதவிக்கு தற்போது ஷிவ்நாத் துக்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். வாட்ஸ்அப்பில் இந்தியாவில் மட்டும் சுமார் 563 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.