பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?
இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் எலோன் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து உலகளவில் ட்விட்டர் ஊழியர்கள் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள டுவிட்டரின் நிலை குறித்து இங்குக் காணலாம்.
கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு, பல்வேறு சர்ச்சைகள், மாற்றங்கள் ஏற்பட்டன. உலகளவில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட பாதி பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்தியாவிலும் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களில் பாதி பேரை மஸ்க் நீக்கினார் . இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், 250 ட்விட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 170 ஊழியர்கள் (பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தவர்கள் உட்பட) பணியில் இல்லை என்று தெரிகிறது. மீதமுள்ள 80 பணியாளர்கள் (தோராயமாக) கடினமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க அலுவலகங்களில் கொண்டு வரப்பட்ட மஸ்கின் விதிகள் அப்படியே இந்திய அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தைப் போல இந்தியாவின் நிலைமை மோசமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு திங்கட்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணிகளுக்கு இடையே வழங்கப்படும் இலவச சிற்றுண்டி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்தியா ஊழியர்களுக்கு இனி இலவச சிற்றுண்டிகள் இல்லை. அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இதே போன்ற விதி பின்பற்றப்படுகிறது .
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்குத் திரும்புமாறு எலான்மஸக் கேட்டுக் கொண்டுள்ளார். வேலை கலாச்சாரத்தில் மஸ்க் கொண்டு வந்துள்ள மற்றொரு மாற்றம் தினசரி வேலை நேரத்தை மாற்றி அமைப்பதாகும். இருப்பினும், ட்விட்டர் தலைமையகத்தில் இருப்பது போல் இந்தியாவில் பணிச்சூழல்கள் மன அழுத்தமாக இல்லை.
16 இன்ச் டிஸ்ப்ளேவுடன் உலகிலேயே குறைந்த எடை Acer லேப்டாப் அறிமுகம்!
ஏனென்றால், இந்திய அலுவலகங்களுக்கு வெளியே பணிபுரியும் பொறியாளர்கள் கடினமான சூழலில் உள்ளனர். வார இறுதி நாட்களிலும் கூட வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ட்விட்டர் ஊழியர்களும் சரியான நேரத்தில் சம்பளம் பெறுகிறார்கள், ஆனால் நிறுவனம் இன்னும் பேஅவுட் ஊதியம் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்களை வெளியிடவில்லை. வேலையிழந்த ஊழியர்கள், உரிய நேரத்தில் தங்களின் நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.