பெண்களாலேயே நடத்தப்படும் முதல் மொபைல் ஸ்டோர் - மாஸ் காட்டிய சாம்சங்
சாம்சங் நிறுவனம் முழுக்க முழுக்க பெண் ஊழியர்கள் நடத்தும் தனது முதல் மொபைல் ஸ்டோரை திறந்துள்ளது.
சாம்சங் இந்தியா நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களாலேயே இயக்கப்படும் முதல் மொபைல் ஸ்டோரை இந்தியாவில் திறந்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி புதிய மொபைல் ஸ்டோர் #PoweringDigitalIndia திட்டத்தின் அங்கமாக திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் ஸ்டோர் ஆமதாபாத் நகரில் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய பெண்களின் திறமையை வெளிப்படுத்தவும், சந்தையில் சாம்சங்கின் பங்குகளை அதிகப்படுத்தும் முதல் படியாக இந்த ஸ்டோர் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆமதாபாத் நகரின் நவ்ரங்கப்புரா பகுதியில் அமைந்துள்ள சாம்சங் ஸ்மார்ட்கஃபே பயனர்களுக்கு முற்றிலும் வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்.
இந்த மொபைல் ஸ்டோர் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களாலேயே நடத்தப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்கஃபேவில் ஸ்டோர் மேனேஜர் முதல் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் கன்சல்டண்ட் வரை அனைத்து பணிகளை மேற்கொள்ளவும் பெண் ஊழியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கேலக்ஸி டிவைஸ் டிரெய்னிங் தவிர இங்கு பணியாற்றும் பெண்கள் வியாபாரத்தின் இதர பிரிவுகளிலும் பயிற்சி பெற இருக்கின்றனர். இதில் கஸ்டமர் சர்வீஸ், சேல்ஸ் மற்றும் அக்கவுண்டிங் போன்ற பிரிவுகள் அடங்கும்.
இதுமட்டுமின்றி பெண் ஊழியர்களுக்கு அலுவல் மற்றும் பணி என வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் உதவி செய்ய சாம்சங் WISE (Women in Samsung Electronics) எனும் பெயரில் புது குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு ஊழியர் ரிசோர்ஸ் குழுவின் கீழ் இயங்குகிறது.
"முதன் முதலில் பெண்களால் இயக்கப்படும் மொபைல் ஸ்டோரை திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இந்த குழு அடைய இருக்கும் புது மைல்கல்லை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எங்களின் குழுவில் மேலும் அதிக பெண் ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது. நிறுவனம் முழுக்க அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை உருவாக்குவோம்," என சாம்சங் தென்மேற்கு ஆசிய பிரிவுக்கான தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கென் கேங் தெரிவித்தார்.