Samsung சாம்சங் போன்களில் அப்டேட்டிற்குப் பிறகு மீண்டும் கிரீன் லைன் டிஸ்பிளே பிரச்சனை எழுந்துள்ளது. இலவச சர்வீஸ் முடிந்ததால், பழுதுபார்க்க ரூ.25,000 வரை கட்டணம் கேட்பதாகப் பயனர்கள் புகார்.
இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், தற்போது மீண்டும் ஒரு விசித்திரமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்திருந்த 'கிரீன் லைன்' (Green Line) டிஸ்பிளே பிரச்சனை, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சமீபத்தில் வந்த மென்பொருள் அப்டேட்டை (Software Update) இன்ஸ்டால் செய்த பிறகுதான், தங்கள் போனின் திரையில் பச்சை நிறக் கோடுகள் தோன்றுவதாகப் பல பயனர்கள் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர்.
மீண்டும் வந்த 'பச்சை கோடு' பூதம்
சாம்சங் போன்களில் இந்த டிஸ்பிளே பிரச்சனை புதிதல்ல. ஏற்கனவே பலமுறை இந்த புகார்கள் எழுந்தபோது, சாம்சங் நிறுவனம் இலவசமாகத் திரையை மாற்றிக்கொடுக்கும் (Free Screen Replacement) திட்டத்தை அறிவித்திருந்தது. ஆனால், அந்தச் சலுகை செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்சனை தலைதூக்கியிருப்பது பயனர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.
பல பயனர்கள் தங்கள் போன் திரையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பச்சை கோடுகள் ஓடுவதாகவும், சிலருக்கு டச் ஸ்கிரீன் (Touchscreen) வேலை செய்வதில்லை என்றும் எக்ஸ் (X - Twitter) தளத்தில் புகைப்படங்களுடன் புகாரளித்து வருகின்றனர்.
பழுதுபார்க்கும் செலவு: ரூ.25,000 வரை!
டிஸ்பிளே பிரச்சனையை விட, சர்வீஸ் சென்டர்கள் கேட்கும் பழுதுபார்ப்பு கட்டணம்தான் பயனர்களை அதிகம் கோபப்படுத்தியுள்ளது.
• ஆக்ராவைச் சேர்ந்த @dbabuadvocate என்ற பயனர், தனது Galaxy Note 20 Ultra போனை அப்டேட் செய்த உடனேயே 8-9 பச்சை கோடுகள் வந்ததாகக் கூறியுள்ளார். இதற்கு சர்வீஸ் சென்டரில் ரூ.21,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.
• மற்றொரு பயனர் தனது Galaxy S20 Plus மற்றும் Galaxy S21 FE போன்களுக்கு பவர் தொடர்பான பிரச்சனை வந்ததாகவும், வாரண்டி முடிந்ததால் பழுதுபார்க்க ரூ.16,000 கேட்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
• இன்னொருவர் டிஸ்பிளே மாற்ற ரூ.11,000 கட்டணம் கேட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய போன்களுக்கும் தப்பாத நிலை
பொதுவாக 3 வருடங்களுக்கு மேலான பழைய போன்களில்தான் இந்த பிரச்சனை வரும் என்று நினைத்தால் அது தவறு. வெறும் இரண்டு மாதங்களே ஆன புதிய சாம்சங் போனிலும் டச் ஸ்கிரீன் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சர்வீஸ் சென்டருக்கு இரண்டு முறை அலைந்தும், மென்பொருளை அப்டேட் செய்யச் சொல்வதைத் தவிர ஊழியர்கள் வேறு எந்தத் தீர்வும் தரவில்லை என்றும், அவர்களின் அணுகுமுறை ஒத்துழைப்புடன் இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
சாம்சங் மௌனம்: பயனர்களின் எதிர்பார்ப்பு என்ன?
புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், சாம்சங் நிறுவனம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. "நாங்கள் தவறு செய்யவில்லை, அப்டேட் செய்ததால் வந்த வினைக்கு நாங்கள் ஏன் ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டும்?" என்பதே பயனர்களின் கேள்வியாக உள்ளது.
பிரீமியம் போன்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். உடனடியாக சாம்சங் நிறுவனம் பழையபடியே 'இலவச டிஸ்பிளே மாற்றுத் திட்டத்தை' மீண்டும் கொண்டுவர வேண்டும் அல்லது மென்பொருள் மூலமாக இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.


