டியூரபிலிட்டி பாவங்கள் - காரால் நசுக்கப்பட்ட கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.. என்ன ஆனது தெரியுமா?
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் டியூரபிலிட்டி வீடியோ அதன் உறுதித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் டியூரபிலிட்டி வீடியோ ஒன்று நெட்டிசன்கள் கவன்த்தை ஈர்த்துள்ளது. பொதுவாக விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை எந்த நிறுவனம் வெளியிட்டாலும், அதன் உறுதித்தன்மையை சோதிக்கிறேன் பேர்வழி என பலர் புத்தம் புது ஸ்மார்ட்போன்களை கபலீகரம் செய்து அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதுவே இணைய உலகில் டியூரபிலிட்டி டெஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் டியூரபிலிட்டி டெஸ்ட் என்ற பேரில் ஸ்மார்ட்போனின் உறுதித்தன்மையை சோதிக்க நடத்தப்படும் சில சோதனைகள் பெரும்பாலும் ஏற்றக்கொள்ளக் கூடியதாகவே தோன்றின. பின் ஸ்மார்ட்போனை அதிக உயரத்தில் இருந்து கீழே போடுவது, தண்ணீரில் போடுவது, அதனை உடைக்க முயற்சிப்பது என டியூரபிலிட்டி டெஸ்ட் பல விதங்களில் அவரவர் கற்பனை திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அந்த வகையில், தற்போது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மீது கார் ஒன்று ஏறி இறங்கி இருக்கிறது. பின் அந்த ஸ்மார்ட்போனிற்கு என்ன ஆனது என்பதை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது சரி காரில் நசுங்கிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ராவுக்கு என்ன தான் ஆனது என நெட்டிசன்கள் ஆர்வமுடன் வீடியோவை பார்த்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். கார் ஏறி, இறங்கிய பின்பும் ஸ்மார்ட்போனிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இருபுறங்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், கார் ஏறி இறங்கிய போதும் எந்த சேதமும் ஏற்படவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் உள்பட பலகட்ட சோதனைகளில் நல்ல முடிவுகளை பெற்று அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.