Air Purifier : டெல்லி பள்ளி மாணவர்கள் கிரிஷ் அகர்வால், சமர்த் மேத்தா இணைந்து 'ப்ராஜெக்ட் வாயு' மூலம் ரூ.140 செலவில் மின்விசிறி ஃபில்டரை உருவாக்கியுள்ளனர். PM2.5 துகள்களை வடிகட்டும் இது 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்துள்ளது. கிரிஷ் அகர்வாலுக்கு 2026 டயானா விருது அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
டெல்லியில் காற்று மாசுபாடு ஒரு முக்கியப் பிரச்சினையாகத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, பள்ளிகளில் பல மணி நேரம் செலவிடும் குழந்தைகள் மாசடைந்த காற்றைச் சுவாசிக்க வேண்டிய சூழல் உள்ளது. வசதியான பள்ளிகளால் விலையுயர்ந்த ஏர் பியூரிஃபையர்களை வாங்க முடியும். ஆனால், குறைந்த வருமானம் கொண்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு அது சாத்தியமில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளனர் டெல்லியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள். சாதாரண மின்விசிறியுடன் பொருத்தக்கூடிய ஒரு பிரத்யேக ஃபில்டரை உருவாக்கி, அதையே ஏர் பியூரிஃபையராக மாற்றியுள்ளனர். இதன் தயாரிப்புச் செலவு வெறும் ரூ.140 மட்டுமே என்பது ஆச்சரியமான விஷயம்.
யார் இந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள்?
டெல்லியில் உள்ள சம்ஸ்கிருதி பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் கிரிஷ் அகர்வால் (Krish Aggarwal), வசந்த் வேலி பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் சமர்த் மேத்தா (Samarth Meattle) ஆகிய இருவரும் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு சுத்தமான காற்று கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'ப்ராஜெக்ட் வாயு' (Project Vayu) என்ற திட்டத்தைத் தொடங்கினர். விலையுயர்ந்த ஏர் பியூரிஃபையர்களை வாங்க முடியாத பள்ளிகளுக்கும் குறைந்த செலவில் காற்றை வடிகட்டும் வசதி கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இதற்காகப் புதிதாக ஒரு இயந்திரத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே பள்ளிகளில் இருக்கும் மின்விசிறிகளையே பயன்படுத்த முடிவு செய்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்த ரூ.140 ஃபில்டர்.
சாதாரண மின்விசிறி எப்படி ஏர் பியூரிஃபையராக மாறுகிறது?
இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் அதன் எளிமைதான். சாதாரண டேபிள் ஃபேன் அல்லது சுவரில் பொருத்தப்பட்ட மின்விசிறியின் முன்பகுதியில் இந்தப் பிரத்யேக ஃபில்டரைப் பொருத்தினால் போதும். இதில் மின்நிலையியல் ஈர்ப்பு விசை கொண்ட இழைகள் (Electrostatically charged fibres) பயன்படுத்தப்படுகின்றன. காற்றில் மிதக்கும் மிக நுண்ணிய தூசுத் துகள்களான PM2.5 உள்ளிட்ட மாசுத் துகள்களை இந்த இழைகள் ஈர்த்துப் பிடிக்கின்றன. ஃபில்டரின் ஓரங்களில் உள்ள எலாஸ்டிக் பட்டையைப் பயன்படுத்தி அதை மின்விசிறியின் முன்பகுதியில் பொருத்திவிடலாம். இதற்குத் தனியாகக் கருவிகளோ, மின்சார இணைப்பில் மாற்றங்களோ தேவையில்லை.
ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பொருத்திவிட முடியும். மின்விசிறியை இயக்கியதும் காற்றின் அழுத்தத்தால் ஃபில்டர் பலூன் போன்ற வடிவத்தில் விரிகிறது. இதன் மூலம் காற்று செல்லும் வடிகட்டும் பரப்பளவு அதிகரிக்கிறது. இதனால் மின்விசிறி இயங்கும்போதே காற்றில் உள்ள நுண்ணிய மாசுத் துகள்களைப் பிடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபில்டரை உருவாக்குவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த வடிகட்டுதல் தொழில்நுட்ப நிறுவனமான ஹாலிங்ஸ்வொர்த் அண்ட் வோஸ் (Hollingsworth & Vose) உடன் மாணவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்த நிறுவனம் ஃபில்டர் தயாரிப்புக்கான மூலப்பொருளையும் வழங்கியுள்ளது.
ரூ.140 ஃபில்டர் எவ்வளவு காற்று மாசைக் குறைக்கிறது?
இந்த ஃபில்டரின் செயல்திறனைச் சோதிப்பதற்காகக் கட்டுப்படுத்தப்பட்ட அறையில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சுமார் 200 சதுர அடி பரப்பளவு கொண்ட மூடப்பட்ட அறையில் நடத்தப்பட்ட சோதனையில், தொடக்கத்தில் ஒரு கன மீட்டர் காற்றில் 158 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்த PM2.5 துகள்களின் செறிவு, ஃபில்டரை ஒரு மணி நேரம் இயக்கிய பிறகு 11 மைக்ரோகிராமாகக் குறைந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, இந்தச் சோதனையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் PM2.5 மாசு குறைந்துள்ளது. ஆனால், எல்லா இடங்களிலும் இதே அளவிலான முடிவு கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அறையின் அளவு, காற்றோட்டம், கதவுகள் திறந்திருக்கும் நிலை போன்றவற்றைப் பொறுத்து ஃபில்டரின் செயல்திறன் மாறுபடும்.
பெரிய வகுப்பறையில் ஒரு ஃபில்டரைப் பயன்படுத்தியபோது, ஒரு மணி நேரத்தில் PM2.5 அளவு சுமார் 60 சதவீதம் குறைந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கதவுகள் திறந்திருப்பதால் வெளியிலிருந்து மாசடைந்த காற்று உள்ளே வரும்போது அதன் செயல்திறன் குறையக்கூடும். மேலும், ஃபில்டரின் நிறம் மாறுவதன் மூலமும் அது எவ்வளவு தூசுகளைச் சேகரித்துள்ளது என்பதை ஓரளவுக்குக் கவனிக்க முடியும். புதிதாக இருக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கும் ஃபில்டர், சில வாரங்களுக்குப் பிறகு சாம்பல் அல்லது கருப்பு நிறமாக மாறுகிறது.
ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குப் பயன்.. இலவசமாக வழங்கப்படும் ஃபில்டர்கள்!
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக டெல்லியில் உள்ள 295 வகுப்பறைகளில் மொத்தம் 602 ஃபில்டர்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் சுமார் 8,000 குழந்தைகள் பயனடைந்தனர். தற்போது இந்த முயற்சி 10 பள்ளிகள் மற்றும் போதிய வசதிகள் இல்லாத சில மருத்துவ மையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20,000 மாணவர்களைச் சென்றடைந்துள்ளதாகத் திட்டத்தின் நிறுவுநர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு ஃபில்டரையும் தயாரிக்கச் சுமார் ரூ.140 செலவாகிறது. ஆனால், பள்ளிகளுக்கு இவை இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதற்கான ஃபில்டர் மூலப்பொருளை ஹாலிங்ஸ்வொர்த் அண்ட் வோஸ் நிறுவனம் இலவசமாக வழங்குகிறது. குளிர்கால மாசுபாட்டுக் காலத்தில் ஒரு ஃபில்டரை இரண்டு அல்லது மூன்று முறை மாற்ற வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை டெல்லி அரசு பள்ளிகளுக்கும், பின்னர் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாணவர்களுக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!
இந்தப் புதுமையான முயற்சிக்காக கிரிஷ் அகர்வாலுக்கு 2026-ம் ஆண்டுக்கான டயானா விருதின் (Diana Award) ரோல் ஆஃப் ஹானரில் இடம் கிடைத்துள்ளது. மறைந்த இளவரசி டயானாவின் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த விருது, சமூக நலன் மற்றும் மனிதநேயப் பணிகளில் சிறப்பான பங்களிப்பு செய்யும் இளைஞர்களை அங்கீகரிக்கிறது. இருப்பினும், இந்த முயற்சிக்கான பாதை எளிதாக இருக்கவில்லை. பள்ளி நிர்வாகங்களிடம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அனுமதி பெறுவதும், அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒப்புதலைப் பெறுவதும் சவாலாக இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெறும் ரூ.140 செலவில் உருவாக்கப்படும் ஒரு சிறிய ஃபில்டர், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உதவும் முயற்சியாக வளர்ந்துள்ளது. விலையுயர்ந்த சாதனங்களை வாங்க முடியாத பள்ளிகளுக்கும் காற்று வடிகட்டும் வசதியைக் கொண்டு செல்ல முடியும் என்பதை இந்த மாணவர்களின் முயற்சி எடுத்துக்காட்டுகிறது.












