WhatsApp மற்றும் WhatsApp Business செயலிகளின் பழைய பதிப்புகளில் 5 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக CERT-In எச்சரித்துள்ளது. போலிக் கோப்புகள் மற்றும் இணைப்புகள் மூலம் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், Android, iPhone, Windows மற்றும் Mac பயனர்கள் தங்கள் செயலியை உடனடியாகப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In, WhatsApp மற்றும் WhatsApp Business செயலிகளில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக எச்சரித்துள்ளது. Android, iPhone மட்டுமல்லாமல் Windows, Mac கணினிகளைப் பயன்படுத்துபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செயலியை உடனே புதுப்பிப்பது ஏன் முக்கியம் என்பதைப் பார்க்கலாம்.

WhatsApp பயன்படுத்தாதவர்கள் இன்று மிகவும் குறைவு. தனிப்பட்ட உரையாடல்கள், அலுவலகத் தகவல்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் இருக்கும் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உங்கள் தகவல்களுக்கும் சாதனத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என இந்திய அரசின் கணினி அவசரகாலப் பதிலளிப்புக் குழுவான CERT-In எச்சரித்துள்ளது.

நவம்பர் 26, 2026 அன்று வெளியிடப்பட்ட CIVN-2026-0576 என்ற பாதுகாப்பு அறிவிப்பில், WhatsApp மற்றும் WhatsApp Business செயலிகளில் ஐந்து வகையான பாதுகாப்புக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைக்கு HIGH என்ற அபாய நிலை வழங்கப்பட்டுள்ளது.

WhatsApp-ல் என்ன பிரச்சனை?

CERT-In வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, WhatsApp-ன் சில பழைய பதிப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, தீங்கிழைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட செய்திகள், இணைப்புகள் அல்லது கோப்புகள் மூலம் இந்தப் பாதிப்புகளைப் பயன்படுத்த முடியும்.

இந்தக் குறைபாடுகளால் சில சூழல்களில் ஹேக்கர்களால் சாதனத்தில் தீங்கிழைக்கும் குறியீடுகளை இயக்குவது, பயனரின் முக்கியமான தகவல்களைப் பெறுவது, பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தாண்டுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், WhatsApp பயன்படுத்தும் அனைவருடைய போன்களும் ஹேக் செய்யப்பட்டுவிட்டன என்று இதற்குப் பொருள் கிடையாது. குறிப்பிட்ட பழைய செயலிப் பதிப்புகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த எச்சரிக்கையே இது.

ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் தாக்குதல் நடத்தலாம்?

CERT-In மற்றும் WhatsApp வெளியிட்டுள்ள பாதுகாப்பு விவரங்களில் ஐந்து குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. போலியான கோப்புகள் மூலம் தாக்குதல்

Windows கணினியில் பயன்படுத்தப்படும் WhatsApp-ல் சில கோப்புகளின் பெயர்களை மாற்றியமைத்து, அவை சாதாரண ஆவணங்கள் போலக் காட்டப்படலாம். ஆனால், அவற்றைத் திறக்கும்போது உண்மையில் தீங்கிழைக்கும் செயலி இயங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

2. போலியான ஆர்டர் விவரங்கள்

Android WhatsApp-ல், அதிகாரப்பூர்வமற்ற செயலி மூலம் அனுப்பப்படும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஆர்டர் விவரச் செய்தியைப் பயனர் திறக்கும்போது, செயலியில் உள்ள சில கோப்புகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக WhatsApp தெரிவித்துள்ளது. சில குறிப்பிட்ட சூழல்களில் உரையாடல் தரவுகள் குறித்த மிகக் குறைந்த தகவல்களும் கசியக்கூடும்.

3. விளம்பர இணைப்புகள் மூலம் தகவல் கசிவு

WhatsApp விளம்பரங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சில பிரத்யேகச் செய்திகளில் உள்ள இணைப்புகளைச் செயலி சரியாகச் சரிபார்க்காத குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சில சூழல்களில் பயனரின் IP முகவரியைத் தாக்குபவர் அறிந்துகொள்ள முடியும்.

4. AI சார்ந்த செய்திகளில் உள்ள குறைபாடு

Instagram Reels தொடர்பான AI வசதிகள் மூலம் அனுப்பப்படும் சில சிறப்புச் செய்திகளைக் கையாள்வதில் பாதுகாப்புக் குறைபாடு இருந்துள்ளது. இதன் மூலம் தாக்குபவர் கட்டுப்பாட்டில் உள்ள இணைய முகவரியிலிருந்து உள்ளடக்கத்தைச் செயலி செயலாக்கும் நிலை ஏற்படலாம்.

5. சான்றிதழ் சரிபார்ப்பில் உள்ள குறைபாடு

Meta AI-ன் பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய சான்றிதழ்களைச் சரிபார்க்கும் முறையிலும் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவதற்கு Meta-வின் உள்கட்டமைப்புக்குள் அணுகல் பெற்றிருக்க வேண்டிய குறிப்பிட்ட சூழல் தேவைப்படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று WhatsApp தெரிவித்துள்ளது.

எந்தெந்த WhatsApp பயனர்கள் பாதிக்கப்படலாம்?

CERT-In வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கீழ்க்கண்ட பழைய பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

  • WhatsApp Android: 2.26.35.74 மற்றும் 2.26.17.4-க்கு முந்தைய பாதிக்கப்பட்ட பதிப்புகள்.
  • WhatsApp Business Android: 2.26.23.70 மற்றும் 2.26.17.4-க்கு முந்தைய பாதிக்கப்பட்ட பதிப்புகள்.
  • WhatsApp iPhone: 2.26.24.72 மற்றும் 2.26.15.72-க்கு முந்தைய பாதிக்கப்பட்ட பதிப்புகள்.
  • WhatsApp Business iPhone: 2.26.23.72-க்கு முந்தைய பதிப்புகள்.
  • WhatsApp Mac: 2.26.23.72-க்கு முந்தைய பதிப்புகள்.
  • WhatsApp Windows: 2.3000.1032164386.258709-க்கு முந்தைய பதிப்புகள்.

இந்தப் பதிப்பு எண்கள் வெவ்வேறு பாதுகாப்புக் குறைபாடுகளுக்கான பாதிக்கப்பட்ட வரம்புகளைக் குறிக்கின்றன. எனவே உங்கள் சாதனத்தில் உள்ள செயலியைப் புதுப்பித்து, கிடைக்கும் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது.

WhatsApp பயனர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான புதுப்பிப்புகளை WhatsApp வெளியிட்டுள்ளது. எனவே முதலில் உங்கள் செயலியைப் புதுப்பிக்க வேண்டும்.

Android பயனர்கள்:

  1. Google Play Store-ஐத் திறக்கவும்.
  2. WhatsApp என்று தேடவும்.
  3. Update என்ற வசதி இருந்தால் அதை அழுத்தவும்.
  4. WhatsApp Business பயன்படுத்துபவர்களும் அதற்கான புதுப்பிப்பைச் செய்ய வேண்டும்.

iPhone பயனர்கள்:

  1. App Store-ஐத் திறக்கவும்.
  2. WhatsApp என்று தேடவும்.
  3. Update வசதி இருந்தால் அதை அழுத்தவும்.
  4. WhatsApp Business பயன்படுத்தினால் அதையும் புதுப்பிக்கவும்.

கணினிப் பயனர்கள்:

Windows மற்றும் Mac கணினிகளில் WhatsApp பயன்படுத்துபவர்கள் அதிகாரப்பூர்வ செயலி அல்லது அதன் புதுப்பிப்பு வசதி மூலம் சமீபத்திய பதிப்பை நிறுவிக்கொள்ள வேண்டும்.

இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்!

  • WhatsApp-ன் அதிகாரப்பூர்வ பதிப்பை மட்டுமே பயன்படுத்துங்கள். மாற்றியமைக்கப்பட்ட செயலிகளைத் தவிர்க்கவும்.
  • தெரியாத நபர்களிடமிருந்து வரும் சந்தேகத்துக்குரிய கோப்புகள், ஆர்டர் விவரங்கள் மற்றும் இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.
  • தேவையில்லாத தானியங்கி மீடியா பதிவிறக்க வசதியை முடக்கி வைக்கலாம்.
  • சந்தேகத்துக்குரிய எண்களிலிருந்து வரும் செய்திகளைத் தவிர்த்து, தேவைப்பட்டால் அந்தக் கணக்குகளை Block மற்றும் Report செய்யுங்கள்.
  • செயலியின் புதுப்பிப்புகளைத் தொடர்ந்து சரிபாருங்கள்.

முக்கியமாக, இந்த எச்சரிக்கையைக் கண்டு WhatsApp-ஐப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டியதில்லை. உங்கள் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்து, சந்தேகத்துக்குரிய செய்திகள் மற்றும் கோப்புகளைக் கையாளும்போது கவனமாக இருப்பதே இப்போதைய முக்கியமான நடவடிக்கை.